தாய்சேய் சிகிச்சை நிலைய கட்டட வேலைக்கு தடங்கல் – மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..

எம்.எம்.இர்பான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தாய்சேய் சிகிச்சை நிலையத்தின் கட்டிட வேலைகளை தொடரவிடாமல் சிலர் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவ்வாரனவர்களை சட்டத்தின்முன் நிருத்துவதோடு எங்களது பிரதேசத்திற்காக தாய்சேய் நிலையத்தை அமைத்துத் தருமாரும் கோறி செம்மண்ணோடை மக்கள் இன்று (புதன்கிழமை) பகல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் ஐரோப்பிய யூனியனின் 45 லட்சம் ரூபா நிதியளிப்பில் யுனிசப் நிறுவனத்தின் நடைமுறையப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினதும் மேற்பார்வையில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டு வருகின்றது.DSC01881 DSC01895 DSC01908 DSC01913

இக்கட்டிடம் அமைக்கப்படும் இடத்தின் அருகில் செம்மண்ணோடை பிரதேசத்தின் பொது விளையாட்டு மைதாணம் ஒன்று உள்ளது இக்கட்டிடம் அமைக்கப்படுவதால் மைதானத்தினது அளவு குறைந்து காணப்படும் என்று அப்பகுதி விளையாட்டு கழகம் ஒன்று தெரிவித்ததையடுத்து விளையாட்டு மைதானம் புணரமைப்புச் செய்து தரப்படும் என்று பிரதேச செயலக அதிகாரிகளால் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.

மைதானத்தை புணரமைப்புச் செய்வதற்கு கிரவல் பெறுவதற்கு சற்று தாமதம் ஏற்படுவதால் மைதான வேலைகளை தாமதித்து செய்வதாகவும் சிகிச்சை நிலையத்தின் வேலைகளை உடனடியா செய்ய வேண்டும் என்றும் பிரதேச செயலக நிருவாகம் எடுத்த முடிவுக்கு எதிராக குறித்த பிரதேசத்தில் உள்ள சாட்டோ விளையாட்டுக் கழகம் தாய் சேய் நிலையத்தை அமைக்கும் வேலைகளை நிருத்துமாறு கோறி கட்டிட வேலைகளை அமைப்பதற்கு தொடர்ந்து தடங்கள்களை ஏற்படுத்தி வந்த நிலையிலயே இன்று அப்பகுதி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரின் பிரதி நிதியாக குறித்த இடத்திற்கு வருகைதந்த உதவி திட்டப் பணிப்பாளர் குறித்த தாய்சேய் நிலையம் திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்படுவதுடன் குறித்த மைதானமும் அபிவிருத்தி செய்யப்படும் என்று தெரிவித்ததையடுத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் கலைந்து சென்றனர்.

கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் அனைவரும் ஒப்பமிட்டு தங்களது பிரதேசத்திற்கான தாய்சேய் சிகிச்சை நிலையம் அமைக்கப்படுவதுடன் அதற்கு தடையாகவுள்ளவர்களை சட்டத்தின்முன் நிறுத்துமாரும் கோறி பிரதேச செயலாளருக்கு கவரியிடப்பட்ட மகஜர் ஒன்றையும் பிரதேச செயலாளரின் பிரிதிநிதியிடம் ஒப்படைத்தனர்.

இதே வேளை இச் சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த சாட்டோ விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வை.எல்.மன்சூர் கருத்துத் தெரிவிக்கையில் :-

குறித்த தாய்சேய் சிகிச்சை நிலையம் அமைப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல மைதானத்தை புணரமைப்புச் செய்து விட்டு கட்டட வேலைகளைச் செய்யுமாறு கோறியுள்ளோம். அதனை சிலர் நாங்கள் கிராமத்திற்கு வரும் அபிவிருத்திகளை எதிர்ப்பதாக தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்துவதாக தெரிவித்தார்.

Leave a comment