எனது முதல் வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டுக்குத்தான்: ஹாபீஸ் நசீர் அகமது

இலங்கை கிழக்கு மாகாண முதல்-மந்திரி ஹாபீஸ் நசீர் அகமது, 2 வாரத்திற்குள் தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக ‘தினத்தந்திக்கு’ அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

இலங்கையின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை போன்ற பகுதிகளை உள்ளடக்கியது கிழக்கு மாகாணம். இதன் புதிய முதல்-மந்திரியாக, ‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்’ துணை தலைவரான ஹாபீஸ் நசீர் அகமது நேற்று முன்தினம் பதவியேற்றார்.

கொழும்பில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருகோணமலை சென்ற அவர் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்தார்.

hafiz-nazeerஇந்த நிலையில் ஹாபீஸ் நசீர் அகமது ‘தினத்தந்தி’ நிருபருக்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: இலங்கையில், புதிய அரசாங்கம் பதவி ஏற்று இருக்கிறது. இதில் தமிழர்களின் வாழ்வு மேம்படுவதற்கான அடையாளம் ஏதாவது தெரிகிறதா?
பதில்: இந்த ஆட்சி ஜனாதிபதி மைத்ரி தலைமையில், இந்த நாட்டின் அடுத்த பெரும்பான்மை கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக கொண்டு, ஏற்படுத்தப்பட்டு இருக்கின்ற அரசாங்கத்தில், அவர்கள் இருவரையும் அந்த ஆசனங்களில் அமர்த்தி அழகு பார்ப்பதற்கான அங்கீகாரத்தை கொடுத்தவர்கள் இந்த நாட்டிலே வாழும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அந்த நம்பிக்கையை உறுதி படுத்தும் முகமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதிலும், குறிப்பாக வடகிழக்கிலே இனப்பிரச்சினைக்கான தீர்வும் எட்டப்பட வேண்டும் என்று வெறுமனே வார்த்தைகளால் கூறிக் கொண்டு இருக்காமல், அதற்கான முயற்சிகளை இருவருமே எடுத்துக் கொண்டு போகின்ற நிலைப்பாடு இந்த 22 நாட்களுக்குள் இந்த நாட்டு மக்களுக்கு விளங்கிக் கொண்டு இருக்கிறது.

அதிலும், குறிப்பாக இந்த அரசாங்கம் இந்தியாவினுடைய உறவையும், ஆதரவையும், அறிவுரைகளையும் எல்லா விஷயங்களிலும் பெற்று வருகிறது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நான் ஒரு முதல்-மந்திரி என்ற முறையில் தமிழ் நாட்டினுடைய உறவை பலப்படுத்துவதற்கும், அவர்களுடைய முதலீட்டை இங்கு வந்து குவிப்பதற்கும், அங்கு அகதிகளாக இருக்கும் மக்களுடைய பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளையும் மும்முரமாக எடுத்து வருகிறேன்.

எங்களுடைய ஜனாதிபதி சிறிசேனாவின் முதல் வெளிநாட்டு பயணம் இந்தியாவுக்கு வந்தது போல, என்னுடைய முதல் பயணம் தமிழ்நாடாக இருக்கும். கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில், தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களர்கள் ஆகிய 3 இனத்தவரையும் அதிகமாக கொண்ட ஒரே ஒரு மாகாணம் கிழக்கு மாகாணம் தான்.

இந்த கிழக்கு மாகாணத்திலே நாட்டில் 3 இன மக்களும் எப்படி ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதற்கான நடவடிக்கைகளை ஒரு முதல்-மந்திரி என்ற முறையில் நான் இப்போது எடுத்து வருகிறேன்.

அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலே, தமிழர்கள் அதிகமான யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை மனதில் கொண்டு கிழக்கு மாகாணத்திலே பெரும்பான்மையாக இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நல்லுறவை பேணுவதும், வேண்டுவதும் மாத்திரம் அல்ல, இந்த ஆட்சியிலே அவர்களையும் பங்காளர்களாக வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

அதற்காக அனைத்து அமைச்சு பணிகளையும் பகிர்ந்து கொண்டு செயல்பட முடியுமானால் அதுவும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதிலும், குறிப்பாக தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு அடித்தளமாக இது அமையும்.

என்னுடைய தமிழ்நாட்டு பயணத்திலே தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அனைத்து தலைவர்களையும் இது சம்பந்தமாக சந்தித்து பேச இருக்கிறேன்.

கேள்வி: தமிழக பயணம் எப்போது?

பதில்: அனேகமாக 16-ந் தேதி எங்கள் ஜனாதிபதியோடு வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றாலும் 2 வாரத்திற்குள் நான் தமிழ்நாட்டிற்கு வருவேன். இதில் முக்கியமான ஒரு விஷயம் தமிழ்நாட்டினுடைய, குறிப்பாக தமிழ்நாட்டு தலைவர்களின் பங்களிப்பும் இந்த தமிழ்-முஸ்லிம் உறவுகளை பலப்படுத்துவதற்கு ஒரு முக்கியமான விஷயம் என்பதை நான் மிகவும் ஆணித்தரமாக நம்புகிறேன்.

கேள்வி: கிழக்கு மாகாணத்திற்கு அதிகார பகிர்வு அளிப்பதற்கான பூர்வாங்க முயற்சிகள் ஏதாவது புதிய அரசால் தொடங்கப்பட்டுள்ளதா?

பதில்: அதற்கான முழு முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்திலே கூறப்பட்ட 13-வது அரசியல் சட்ட திருத்தத்தில், உண்டாக்கி இருந்த நில அதிகாரம், அதேபோன்று போலீஸ் அதிகாரம் என்பவற்றை, அமல்படுத்துவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இது முந்தைய அரசாங்கத்திலே உறுதியாக மறுக்கப்பட்ட ஒரு விஷயமாகும்.

கேள்வி: கிழக்கு மாகாணங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலை மாறினால் தான் மக்களுக்கு அச்சம் இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதால், ராணுவத்தை வாபஸ் பெற பிரதமரை வலியுறுத்துவீர்களா? அந்த பணி எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: அதற்கான பேச்சுவார்த்தையை ஏற்கனவே அரசாங்கம் ஆரம்பித்து இருக்கிறது. எங்கெங்கெல்லாம் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இடங்களிலே ராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்பது பற்றிய பேச்சுவார்த்தையை மிக தீவிரமாக இலங்கை அரசாங்கமும், நானும் செய்து வருகிறோம். கிழக்கு மாகாணத்திலே அதை நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் என்னால் செய்யப்படும்.

கேள்வி: 2009-ம் ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் உரிமையில் இருந்த வீடுகள், நிலங்கள் போன்றவை இப்போது ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பதாக சர்வதேச அளவில் புகார்கள் இருக்கிறது. இப்படி எத்தனை பேருக்கு சொந்தமான நிலங்கள், வீடுகள் இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளன என்ற விவரமான கணக்கு இருக்கிறதா? அப்படி இருப்பின் அவற்றை திரும்ப வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

பதில்: அந்த கணக்குகள் எல்லாம் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான தீர்வுகள், குறிப்பாக எத்தனை பேரின் நிலம், வீடுகள் எப்படி திரும்ப கொடுப்பது, என்பதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கி விட்டன.

கேள்வி: இலங்கையில் உள்ள முகாம்களில் எவ்வளவு தமிழர்களை அவரவர் சொந்த இடங்களில் மறுகுடியமர்த்தும் பணிகள் எப்போது தொடங்கப்படும்? அதற்கான சூழ்நிலை உருவாகிவிட்டதா?

பதில்: உடனடியாக தொடங்குவதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் எடுத்து விட்டது. 100 நாட்களுக்குள் அதற்கான ஒரு முன்னேற்றத்தை எல்லோரும் காணலாம்.

கேள்வி: தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் திரும்ப இலங்கைக்கு வருவதற்கான சூழ்நிலை உருவாகி விட்டதா? அப்படி வருவதானால், அவர்களுக்கு என்னென்ன உதவிகளை நீங்கள் செய்வீர்கள்?

பதில்: அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை மிகவும் வலியுறுத்தி வருகிறது. ஏனெனில், அதிகமான அகதிகள் வடக்கில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள். கிழக்கு மாகாணத்தை விட வடக்கில் இருந்து தான் அதிகமாக அங்கு வந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இவர்களுக்கான உடனடி தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அது அவர்களுக்கு முக்கியமாக வழங்கப்பட வேண்டிய ஒரு விஷயம், அவர்களின் இருப்பிட உத்திரவாதமும், வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கான உத்திரவாதமும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பாதுகாப்பு உத்திரவாதம் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

-தினத்தந்தி-

Comments

  1. ஒன்று பொருளாதரத்தை முடக்கி தங்களுக்குள் வைத்துக்கொள்ளல், மற்றது உலகம் சுற்றுதல் இது அரசியல் கதிரைகளுக்குரிய இலட்சணம். அது எல்லோரும் அறிவார்கள் சென்றுவாருங்கள். பயணம் ஆரம்பமாகட்டும்.

Leave a comment