சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை மாணவர்கள் வகுப்புக்களை பகிஷ்கரிப்பு

-நமது செய்தியாளர்-

கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் தமது வகுப்புக்களை புதன்கிழமை (21.3.2012) காலை முதல் பிற்பகல் வரை பகிஷ்கரித்து நிறுவக  வளாகத்தில் ஒன்று கூடினர்.

சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் காணப்படும் பல்வேறு ஊழல் மோசடிகளுக்கெதிராகவும் கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்துமே இம் மாணவர்கள் தமது வகுப்புக்களை பகிஷ்கரித்தனர்.

இந் நிறுவகத்திலுள்ள மாணவர்களின் சுற்றுலாவுக்காக வழங்கப்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந் நிலையத்தில் விரிவுரையாளர்கள் இதன் நிருவாகிகளுக்குள் பிரச்சினை இருந்து வருவதால் இதன் அபிவிருத்தி அலைக்கழிக்கப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், அத்தோடு விரிவுரையாளர்கள் பற்றாக்குறை இருந்து வருவதாகவும் இது வரை சீர் செய்யப்படாமல் உள்ளதாகவும் இம் மாணவர்கள் தெரிவித்தனார்.

கடந்த 3 வருடங்களாக விரிவுரையாளர் பற்றாக்குறை இருந்து வருவதனால் மாணவர்கள் பல் வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் நான்கு வருடங்களில் பட்டப்படிப்பை முடித்து வெளியேற வேண்டிய மாணவர்கள் ஐந்து வருடங்கள் இங்கு கற்க வேண்டிய நிலை உள்ளதாகவும் இம் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாணவர்களின் பாதுகாப்புக் கருதி பல்கலைக்கழக வளாகத்தினுள் விடுதி வசதிகள் மேற்கொள்ளப்படாமல் வெளியில் மாணவர்களுக்கு விடுதி வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர் நோக்குவதாகவும் இம் மாணவர்கள் தெரிவித்தனர்.

மேற்படி குறைகளை பல் கலைக்கழக நிருவாகம் சீர் செய்வதுடன் விரிவுரையாளர்கள் தட்டுப்பாட்டையும் நிவர்த்தி செய்ய வேண்டுமெனக் கேட்டே இம் மாணவர்கள் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

விரிவுரையாளர்கள் மற்றும் நிலையத்தின் நிருவாகத்தினரையும் நிறுவகத்திற்குள் வைத்து மாணவர்கள் கதவை மூடியிருந்தனர்.

எமது மேற்படி கோரிக்கைகள் நிறைவேற்றும் உத்தரவாதம் கிடைக்கும் வரை கதவை திறக்க மாட்டோம் எனவும் இம்மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலைமையையடுத்து இங்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது மாணவர்களுக்கும் பொலிசாருக்குமிடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது.

பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து அங்கு விரைந்த கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருடன் மாணவர்கள் பேச்சுவார்த்தiயில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா வழங்கிய உறுதிமொழியினையடுத்து இம் மாணவர்கள் தமது பகிஷ்கரிப்பினை கைவிட்டனர்.

2nd Update

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் நேற்று (21.3.2012) மேற்கொண்ட வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் நேற்று மாலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா மாணவர்களுக்கு வழங்கிய உறுதி மொழியினையடுத்து மாணவர்களின் பகிஸ்கரிப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநதி கிட்ணன் கோவிந்தராஜாவுக்கும் இந்நிறுவக மாணவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நிறுவக மண்டபத்தில் நேற்று (21.3.2012) மாலை நடைபெற்றது.

இந்த சந்திப்பில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் காணப்படும் பல் வேறு குறைபாடுகள் குறித்து மாணவர்கள் கிழக்குப்பல்கலைக்கழக உப வேந்தருக்கு எடுத்துக் கூறினர்.

இந்நிறுவகத்தின் மாணவர்கள் சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்த நிதி எங்கே என்று தெரியாமல் உள்ளது.

நிறுவகத்தில் போதியளவு விரிவுரையாளர்கள் இல்லாமையினால் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், மாணவர்களுக்கான சுற்றுலாவை ஏற்பாடு செய்து கொடுக்காமை, கடந்த 3வருடங்களாக விரிவுரையாளர் தட்டுப்பாடு நிலவுகின்றமை, விரிவுரையாளர்களுக்கும் நிருவாகத்தினருக்குமிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றமை, மாணவர்களுக்கான விடுதிவசதிகள் நிறுவகத்திற்கு வெளியே ஏற்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல் வேறு குறைபாடுகளை மாணவர்கள் இதன் போது உப வேந்தரிடம் சுட்டிக்காட்டினர்.

மாணவர்களின் இக்குறைபாடுகளை கேட்டறிந்த உபவேந்தர் இவற்றை எழுத்து முலம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டதுடன் மாணவர்களின் இக்கேரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மாணவர்களின் சுற்றுலாவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி ஒரு தொகுதி மாணவர்களுக்கான சுற்றுலாவையும் இன்னொரு தொகுதி மாணவர்களுக்கு ஏப்ரல் 16ம் திகதியும் சுற்றுலாவை ஏற்பாடு செய்து கொடுக்குமாறும் உபவேந்தர் இதன் போது அழகியற் கற்கைகள் நிறுவக நிருவாகத்தினரிடம் உத்தரவிட்டார்.

இந் நிறுவக கட்டிடத்திற்கு வர்ணம் தீட்டுமாறு இதன் நிருவாகத்தினருக்கு உத்தரவிட்ட உப வேந்தர் இதன் சுற்றுப்புறச் சூழலையும் சுற்றிப்பார்வையிட்டதுடன் இங்கு தான் அடிக்கடி விஜயம் செய்து இதன் நிலைமைகளை கண்காணிக்கவுள்ளதாகவும் இதன் போது உபவேந்தர் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்தின் கீழ் இயங்கும் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் பல் வேறு கோரிக்கைகளை முன்வைத்து  தமது வகுப்புக்களை நேற்று புதன்கிழமை (21.3.2012) காலை முதல் பிற்பகள் வரை பகிஷ்கரித்து நிறுவக  வளாகத்தில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் நிறுவக விரிரையாளர்கள் மற்றும் நிறுவக நிருவாகத்தினரை நிறுவக கட்டிடத்திற்குள் பல மணி நேரம் வைத்து கதவை பூட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

  1. அவதானி says:

    மாணவர்களை ஏமாற்றி பிழைக்காதே.
    மாணவர்களை ஏமாற்றி பிடைக்காதே.
    இரண்டிலும் எது சரி?

Leave a comment