Advertisements

யாருக்கு தொப்பி?

எஸ்.எம்.எம்.பஷீர் 

“அதிகாரம் சீரழிப்பதால் , பதவிக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் பொழுது ,  அறவழி  அதிகாரத்துக்கும் சிறப்பியல்களுக்குமான  சமுதாயத்தின் தேவைகள் அதிகரிக்கின்றன”  –  ஜான் அடம்ஸ் 

( Because power corrupts, society’s demands for moral authority and character increase as the importance of the position increases. –  John Adams )

ecmகிழக்கு மாகான சபைக்கான முதல்வர் நியமன இழுபறி இறுதியில் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஒருபுறம் மைத்ரி ஜனாதிபதியாக நாங்களும்  காரணம் என்ற தமிழர்களும் முஸ்லிம்களும்  ஆளுக்கு ஆள் வீராப்பு கதை பேசித் திரிய, தமிழர் கூட்டமைப்பு மைத்ரீயை சந்தித்து தங்களின் கட்சியிலில் இருந்தே கிழக்கு முதல்வர் நியமிக்கபட வேண்டும் என்று கோரப் போவதாக செய்திகள் ஊடகங்களில் ஊடாட, இந்நாள் வரை இரண்டரை வருடக் கதையை, இலேசாக அவ்வப்போது ஞாபகம் ஊட்டிக்  கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திடீரெண்டு எங்களுக்கே முதல்வர் பதவி தரப்பட வேண்டும் என்று அட்டகாசமாக அவரோகணத்தில் தங்களின் முதல்வர் கோரிக்கையை முன்னெடுத்த பொழுது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் சொன்ன இரண்டரை வருட முதல்வர் சமாச்சாரம் உண்மைதான் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முதல்வர் பதவி வழங்கி உறுதி செய்திருக்கிறார்கள்.

இதுவரையும் கிழக்கிலே இரண்டு  முதல்வர்கள் இரண்டு பிரதான சமூகங்களில் இருந்து “அரசோச்சி” உள்ளார்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க சந்திரகாந்தனும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நஜீப் எ மஜீதும் தேசியக் கட்சியின் பிரதிநிதிகளாக முதல்வர் பதவியினை வகித்தாலும் அவர்களை கிழக்கு பிரதேசத்தில் செல்வாக்குபெற்ற பிரதான தமிழரினதும் முஸ்லிம்களதும் இரு கட்சிகளும் முறையே தமிழராகவோ அல்லது ஒரு முஸ்லிமாகவோ அங்கீகரிக்கவில்லை. தங்கள் கட்சிகளில் உள்ள ஒரு தமிழரை முதலமைச்சராக நியமித்தால் மட்டுமே அவர் தமிழர் என்பது போல தமிழ் கூட்டமைப்பும்,  தங்கள் கட்சிகளில் உள்ள ஒரு முஸ்லிமை முதலமைச்சராக நியமித்தால் மட்டுமே அவர் முஸ்லிம் என்பது போல முஸ்லிம் காங்கிரசும் நடந்து கொண்டனர். மக்களின் மனதிலும் அந்த சிந்தனையோட்டம்  பலமாக வேரூன்றி இருந்தது.  இனவாத அரசியல் கட்சிகளின் இடையறாத முயற்சியினால் இனவாத அரசியல் பலம் வாய்ந்ததாக தனது வேர்களை வடக்கிலும் கிழக்கிலும்  ஊன்றிக் கொண்டதால் வடக்கிலும் கிழக்கிலும் அத்தகைய மக்கள் எதிர்பார்ப்பும் சகஜமாகவே அமைத்து விட்டது.

ஆனாலும் முதன் முதலில் நடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு அடிப்படைகளில் (அதிக வாக்கு பெற்றவர் என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்ற முன்னாள் ஜனாதிபதியின்  வாக்குறுதி உட்பட அரசில் அங்கத்துவம் வகித்த அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விற்கு வழங்கப்படல் வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. அப்பொழுது முஸ்லிம்கள்,  முஸ்லிம் முதலமைச்சர், அதுவும் இன்னுமொரு வடக்கு கிழக்கில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியில்  இருந்து தெரிவாவதை ஆதரித்தார்கள் என்பதும் முதலமைச்சர் பதவிக்கு எதிரணிக் கூட்டணியில்  போட்டியிட்ட ஹக்கீம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியவில்லை என்பதும் தெரிந்த கதைதான். பின்னர் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு அரசு சந்திரகாசனை நியமித்தது. ஆக்ரோசமாக கட்சிக் கூட்டில் இருந்து விலகப் போவதாக அட்டகாசம் செய்த ஹிஸ்புல்லாஹ்வை ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு அரசு அமைதிப்படுத்தியது.

எது எவ்வாறெனினும் சந்திரகாந்தன் கிழக்கு மாகான சபைத் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவருக்கு ஆதரவு வழங்கக் கூடாது என்று கூக்குரலிட்ட கூட்டமைப்பு  பின்னர் அவர் முதலமைச்சர் ஆக்கப்பட்டதும் மாற்று கட்சியில் இருந்தாலும் அவரை ஒரு தமிழ் முதலமைச்சர் என்று அங்கீகரிக்கவில்லை. முதலாவது  கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிரணி வேட்பாளர் ஹக்கீமுக்கு  மறைமுக ஆதரவு வழங்கியதும் கூட தெரிந்த செய்திதான். புலிக்குப் பயந்து செயற்பட்டாலும்  ஹக்கீம் வெற்றி ஈட்டி , ஒருவேளை முதலமைச்சர் ஆகி இருந்தால் அப்பொழுது நாங்கள் என்ன செய்ய என்று புலிகளிடம் கையைக் கட்டிக் கொண்டு வாளாவிருந்திருப்பார்கள். மாகாண சபை தீர்வாகாது , அதில் போட்டி இடுவது , மாகாண சபையை அங்கீகரிப்பதாக ஆகிவிடும்,  அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்பது புலிகளின் கட்டளை மட்டுமல்ல, கூட்டமைப்பின் கொள்கையும் கூட!

IMG_0816ஆனால் பின்னர் புலி அழிந்த பின்னர் புலி வாலாக செயற்பட்ட பலர்  வடக்கு மாகாண சபைத் தேர்தலில் குதித்தனர். வெற்றி ஈட்டினர். மாகாண சபை தீர்வாகாது ஆனாலும் அதனை இப்போதைக்கு பயன்படுத்த வேண்டும் என்று தங்களின் வழக்கமான புராணங்களைப் பாடினர். அதன் பின்னர் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் குதித்தனர். அதிக வாக்குகளை பெற்றனர்.  “மெத்தப்படித்த” முன்னாள் நீதியரசர் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி ஈட்டினார். அவர் தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு புலிகளின் பரணி பாடியே வாக்கு சேகரிக்க முடியும் என்று தீர்க்கமாக நம்பினார், தனது மனச் சாட்சிக்கு முரணாக முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக பிரபாகரன் எனும் பயங்கரவாதியை , புலிகள் இயக்கத்தை போற்றி புகழ்ந்தார். கற்றவர்க்கு அழகு கசடற மொழிதல் ”.கல்விக்கு அழகு கசடற மொழிதல்” (வெற்றிவேற்கை) . ஆனால் என்னவோ கூட்டமைப்புடன் சேர்ந்த சில நாட்களிலே நீதியரசர் கசடுற மொழியத் தொடக்கி விட்டார். இன்று வரை கற்ற அவரின் பேச்சும் செயலும் கரைதேர்ந்த கூட்டமைப்பு கடைத்தர அரசியல்வாதிகளை எல்லாம் மிஞ்சி விடும் அளவு இருப்பதனை அவரின் அரசியலை நன்கு அவதானிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம் !

நாடளாவிய ரீதியில் கிழக்கிலே முதலில் முதமைச்சராகவிருந்த சந்திரகாந்தன் பெரிய கல்வி அறிவு பெற்றவரல்ல , முன்னாள் புலி இயக்க உறுப்பினர் , ஆயுதம் தரித்து மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் , ஜனநாயக அரசியலுக்குள் நுழைந்தவர். ஆனாலும் பின்னர் அவரைத் தொடர்ந்த வந்த நஜீப் ஏ மஜீதை விட  அவர் நன்றாக செயற்பட்டார் என்பதாக முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலர் பகிரங்கமாகவே சொன்னவை பதிவுகளாக உள்ளன.

ஆனால் சென்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒரு முஸ்லிம்  முதலமைச்சராக வர தாங்கள் ஆதரவு அளிப்பதாக முஸ்லிம் காங்கிரசின் ஆதரவை கோரி நின்ற தமிழர் கூட்டமைப்பு , தேர்தலின் பின்னர் தங்களுக்கு ஆட்சி அமைக்க சந்தர்ப்பம் வழங்கவில்லை என்பதற்காக முஸ்லிம் காங்கிரசை மிகக் கேவலமாக விமர்சிப்பதில் முனைப்புடன் செயற்பட்டனர். அப்பொழுதான் அதுவரை முஸ்லிம் காங்கிரஸ் மீது பற்றும் பாசமும் கொண்ட தமிழ் கூட்டமைப்பின் சந்தர்ப்பவாதம் வெளிப்பட்டது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ்  மிக உருப்படியான முடிவினை அப்பொழுது எடுத்திருந்தது, அந்த முடிவின் இரண்டாவதும் இறுதியானதுமான நிகழ்வே முஸ்லிம் முதலமைச்சரினை  முஸ்லிம் காங்கிரஸ் இப்பொழுது பெற்றுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் மக்கள் மீதான பரிவும் பாசமும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் எப்படி  போலியானது என்பதை முதலமைச்சர் முடிவுகள் நிரூபித்தனவோ, இப்பொழுதும் முதலமைச்சரைப் பகிர்ந்து கொள்வதில் முஸ்லிம் காங்கிரசின் முடிவு, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்தக் காலத்திலும் எந்த உடன்பாட்டையும் முஸ்லிம்கள் செய்யக் கூடாது என்பதை சொல்லாமல் சொல்லி நிற்கிறது.

இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களின் வர்ணத்தை மீண்டும் மெருகூட்டி வருகிறார்கள். முஸ்லிம்கள் கிழக்கிலே தமிழர்களின் நிலங்களை கபளீகரம் செய்துள்ளார்கள், பெரும்பான்மை சிங்களவருடன் சேர்ந்து சலுகைகளை காலங்காலமாக அனுபவிக்கிறார்கள், தமிழர்கள் பெற வேண்டிய நியாயமான பங்கீடுகளை அபிவிருத்திகளை தாங்களே அனுபவித்து வருகிறார்கள்  என்றெல்லாம் கிழக்கு மாகாண சபையின் சில தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள், தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தங்களின் தமிழ்ப் பிரதேச சந்திப்புக்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பும்  “விச வைரசுக்கள்” அடி மட்டங்களில் தமிழ் மக்கள் மனதில் முஸ்லிம் விரோதத்தை   மீண்டும் கட்டமைத்து வருகிறது.  இங்குதான் கவனிக்க வேண்டியது ஒன்று என்னவெனில் சந்திரகாந்தன் முதல்வராக நியமிக்க முன்னின்றவர்களில் ஒருவர் அக்கரைப்பற்று அதாவுல்லா, ஆரம்பத்தில் தீவிரமாக எதிர்த்தாலும், பின்னர் ஹிஸ்புல்லாஹ் உட்பட கிழக்கின் பல முஸ்லிம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அன்றைய அரசுத் தலைவரின் நியமனத்துக்கு கட்டுப்பட்டு சந்திரகாந்தனுக்கு ஆதரவு வழங்கினர்.

ஆனால் கிழக்கின் முதலமைச்சர் பதவிக்கு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்த பொழுது அதற்கு சந்திரகாந்தன் கூட்டமைப்பு தமிழர் ஒருவர்தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று ஒத்து ஊதியது அவரின் வர்ணத்தையும் வெளிக் காட்டி உள்ளது .

யாரை கிழக்கு மாகாண சபை முதல்வராக நியமிப்பது என்ற கேள்வி முஸ்லிம் காங்கிரசுக்குள்   எழுந்த பொழுது பல்வேறு ஊகங்கள் சென்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் ஏற்பட்டதுபோல் , இம்முறையும் யார் அந்த முஸ்லிம் காங்கிரஸ் முசல்மான் என்ற ஊகங்கள்  உலாவத் தொடங்கின. ஆனால் கல்முனை மாநகர மேயர் விவகாரத்தில் தலையெடுத்த ஊர் , மாவட்ட வாதம் மீண்டும் தலையெடுத்தது. அதன் அடிப்படையில் பொருத்தமானவர்கள் யார் என்ற கேள்வி எழுந்த பொழுது. முன்னாள் அமைச்சர் மன்சூரின் பெயரும் பிரேரிக்கப்பட்டது. இப்பொழுதெல்லாம் அரசியல்வாதிகளும் மன்னர்கள் போல் ஆயுள்காலம் முழுவதும் ஏதோ ஆட்சிக் கதிரையில் இருந்து வாழ்ந்து , வளம் பெற்றது போதாது என்று இறந்தும்  அரச மரியாதையுடன் மரணிக்கவே விரும்புகிறார்கள். ஹக்கீம் போன்றோர் முஸ்லிம் காங்கிரஸ் தலைப்பாகையுடனும் சால்வையுடனும் மரிப்பதே தனது பாக்கியம் என்று கூறி மேடைச் சவடால் விடுவது மட்டுமல்ல கிழக்கு முஸ்லிம்கள் தன்னை  தன்னை என்றும் கட்சியின் தலைவராக தனது மரணம் வரை வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கையை கொண்டிருப்பவர்.

தலைவர் தேர்வுக்கான கால நிர்ணயம் அல்லது தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமை மறுப்பைக் கொண்ட ஒரு கட்சி யாப்பினைக் கொண்டு வந்த அஸ்ரப் தானே ஆயுட் காலத் தலைவர் ஆக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இன்று அவரின் இடத்தில் இப்பொழுது ஹக்கீம் உட்கார்ந்திருக்கிறார். தலைவருக்கு எதிராக கட்சியில் கேள்வி எழுப்பினால் அல்லது முரண்பட்டால் நீங்கள் ஒன்று விலகிச் செல்ல வேண்டும் அல்லது விலக்கப்படுவீர்கள், விலகினால் , ஒன்று உங்களை “விளங்காமல் செய்ய ” முஸ்லிம் காங்கிரசின் “போராளிகள்” வீதியில் இறங்கிப் போராட்டம் கூட நடத்துவார்கள், விலக்கப்பட்டால் அல்லது விலகினால் யாருக்கேனும் “தில்லு” இருந்தால்  அவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக செயற்பட்டு வெற்றி ஈட்டுவார்கள். (அதற்கு நல்ல  உதாரணம்  ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ்), ஆனால் பல தடவை  ஹக்கீமுக்கு எதிர்ப்புக்கள் அவர் தலைவரான காலம் முதல் கிழக்கிலே காட்டப்பட்டு வருகின்றன. ஆனாலும் அவற்றை எல்லாம் அவர் சமாளித்து வருவதற்கு முக்கிய காரணம் திகாமடுல்ல மாவட்டத்தில்  மிக ஆழமாய் வெரூன்றியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் எனும் மரத்தின் வேர்களும் விழுதுகளுமாகும்.

இம்முறை கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தங்களது ஒப்பந்தப்படியான முதலமைச்சரை சுழற்சி முறையில் நியமிக்கும் முறை வந்த வேளையில் யாரை நியமிப்பது என்பதில் ஆரம்பத்தில் பெரிய குழப்ப நிலை காணப்படவில்லை.   ஆனால் இறுதி நேரத்தில் மறைமுகமாக தானே அப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டியர் என்பதை நாசூக்காக ஜமீல் தமது ஆதரவாளர்கள் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் . அதிலும் குறிப்பாக எத்தகைய முஸ்லிம் முதலமைச்சர் வர வேண்டும் என்பதற்கு “வட மாகாண சபையின் முதலமைச்சர்  சீ. வீ. விக்னேஸ்வரன் போன்று நன்கு படித்த பெறுமதியான மனிதர் ஒருவரே கிழக்கு மாகாண சபை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்” என்று கல்முனை மாநகர மேயர் நிசாம் காரியப்பர் சிலாகித்துக் கூறியதாக முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல் சொல்லி இருந்தார்.

ஆனால் தெரிவு செய்யப்பட்ட நசீர் ஹாபீஸ் (ஜைனுலாப்தீன் நஷீர் அஹமட்- ஹாபீஸ் என்பது அவரின் குடும்பப் பெயர் அல்ல)  விக்னேஸ்வரன் போல் கற்றவரா, அல்லது ஜமீல்தான் அவரைப்போல் கற்றவரா என்ற கேள்விகள் ஒப்பீடுகள் எல்லாமே அபத்தமானவை!.   இந்தியக் கண்டத்தை ஆளும் மோடி என்ன முதுமானியா, அல்லது இலங்கை ஜனாதிபதி மைத்ரி என்ன பட்டதாரியா?  ஆனாலும் ஜமீலும் நசீரும் ஏதோ ஒரு விதத்தில் பட்டதாரிகள்.

கற்றறிந்த  விக்னேஸ்வரன் போன்றோர் பயங்கரவாத புலிகளை ஆராதித்து கசடுற மொழிதல் செய்வதில் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது. அவரின் பெறுமதி இப்பொழுது மிக மிகக் குறைத்து போய்விட்டது. கிழக்கின் முதலமைச்சருக்கு கூட்டமைப்பு தேர்வு செய்திருந்த இப்போதைய கிழக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர்     சி . தண்டாயுதபாணி முன்னாள் புலிகளின் திருமலை மாவட்ட தலைவர்களில் ஒருவரான ஐங்கரனை புலிகளின் காலத்தில் இரண்டாய் வளைந்து போற்றியதாக காணொளிகள் உள்ளன என அறிய முடிகிறது. அப்படியாயின் முதுமாணிப் பட்டம் பெற்ற சி. தண்டாயுதபாணி, சீ. விக்னேஸ்வரன் போன்ற கற்றோரிடம் அல்லது இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கூட்டமைப்பிடம் இருந்தும் என்ன பாடத்தைக் கற்றுக் கொள்வது.

புலிகளை போற்றியே அவர் வாழ்ந்தார் என்ற செய்திகள் அவரின் கல்வியையே கேள்விக்குள்ளாக்குகிறது. தமிழ் கூட்டமைப்பிடம் இருந்து இனவாதப் பாடத்தை கற்று கச்சிதமாக செயற்பட்டு வரும் முஸ்லிம் காங்கிரஸ் இப்பொழுது எதிர் கொள்ளும் பிரதேசவாதம் என்பதை சமாளிப்பதிலும் பல பாடங்களை முன்னரே தமிழ் கூட்டமைப்பிடம் கற்றுக் கொண்டுள்ளார்கள். தங்களின் இன மத ஜனாதிபதி இலங்கையில் வர முடியாது என்பதற்கு அப்பால், ஒரு நல்ல ஜனாதிபதி ஆட்சிக்கு வர வேண்டும் என்று பள்ளிவாசல்களில் பிரார்த்தனைகள் செய்தவர்கள் ,   விசேட தொழுகை நடத்திவிட்டு வாக்களிக்க சொன்னவர்கள், சென்றவர்கள், கிழக்கிலே முஸ்லிம் முதலமைச்சர் வர முடியும் என்ற நம்பிக்கையிலும் சூழலிலும் அப்படியான வணக்க வழிபாடுகளுக்கு  தேவை இல்லை என்பதை உணர்ந்தவர்கள் , அந்தப் பணியை (கிழக்கு முதலமைச்சர் தேர்வை)  முஸ்லிம் காங்கிரசிடம்  ஒப்படைத்தவர்கள் , இப்பொழுது யாருக்கு பதவி என்பதில் பள்ளிவாசல்களுக்கு முன்பாக தொழுத பின்னர் அடித்துக் கொள்கிறார்கள், அல்லது ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்கள் .  முஸ்லிம் அரசியலுடன் வன்முறையும் ஜனநாய மறுப்பும் கிழக்கில் அபரிதமாகவே  இயைந்து இருக்கிறது.

bazeerlanka.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: