Advertisements

கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் ஐக்கிய மாகாண ஆட்சியே உடனடித் தேவை

எம். பௌசர்

கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம் சமூகங்களையும், கிழக்கு வாழ் மக்களையும் இரு துருவ நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஜனநாயக அடிப்படைக் கட்டுமாணங்களுக்கு வெளியில், எதோச்சதிகாரப் போக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை செயல்பட்டு நிலைமையை சிக்கலாக்கி உள்ளது.

வரலாற்றில் இந்த தன்னிச்சையான செயற்பாட்டுக்கு கிழக்கு முஸ்லிம் சமூகம் பெரும் விலையை கொடுக்க வேண்டி இருப்பதுடன் பாரதூரமான பொறுப்பினையும் ஏற்க வேண்டி இருக்கும். கிழக்கு மாகாணத்தில் அமையவுள்ள மாகாண ஆட்சியில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ பங்களிப்பில்லாது, அம்மக்களின் அபிலாசைகளை புறம் தள்ளி ஒரு மாகாண ஆட்சி நடைபெறுமானால் அதன் கைதேசம் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை நீண்டகால அடிப்படையில் பாதிக்கும் என்பதுடன், தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை மிகக் கூர்மைப்படுத்த வழிவகுக்கும். ஒரு சமூகத்தின் உரிமையை கோருகின்ற போது, மற்ற சமூகங்களின் அடிப்படை உரிமையினை பாதுகாப்பதிலும் மதிப்பதிலும் கவனம் செலுத்துவது இன்றியமையாத நிலைப்பாடாக இருத்தல் அவசியம் என்பதே எனது உறுதியான பார்வையாகும்.

கடந்த ஜனவரி 08 இல் இலங்கை மைய அரசியலில் நல்லாட்சிக்காக நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் பக்க விளைவாக நிகழ்ந்த கிழக்கு மாகாண ஆட்சி அமைக்கும் விவகாரம் , நல்லாட்சிக்கு மாற்றாக எதோச்சதிகாரப் போக்கில், இனவாத தன்மையில் முன் நோக்கி கொண்டு செல்லப்படுவது ஆரோக்கியமான நிலைமை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரசுக்கிடையிலும், கணிசமான தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கிடையிலும் கிழக்கின் முதலமைச்சர் யார் என்கிற போட்டா போட்டியை ஏற்படுத்திய அரசியல் சித்து விளையாட்டே அடிப்படையில் தவறானதாகும். இதில் அந்தந்தக்கட்சியினதோ, அந்தந்த இன மக்களினதோ பிரதிநிதி முதலமைச்சரானால் அம்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமென நம்புவது ,அல்லது நம்ப வைக்கப்படுவது மக்களை ஏமாற்றும் அரசியலாகும்.

இந்தக் குறிப்பினை எழுதுகின்ற போது முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்தவரும், எனது நண்பருமான ஹாபிஸ் நசீர் அஹமட் கிழக்கு முதலமைச்சராக ஆளுனர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்த செய்தியினை படிக்கக் கூடியதாக இருந்தது.

ஹாபிஸ் நசீர் அஹமட் முதலமைச்சராக நியமிக்கப்பட்டு விட்டதால் கிழக்கு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாகவும், முஸ்லிம்களுக்கு பெரும் அரசியல் அதிகாரம் கிடைத்து விட்டதாகவும் தமிழ் மக்களோ, முஸ்லிம் மக்களோ நம்பத் தேவையில்லை. அதேபோல் தமிழர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தாலும் இதுதான் நிலை.

பிரச்சினையும் அதற்கான தீர்வும் யார் முதலமைச்சராக வருவது என்பதில் இல்லை. தீர்வே இந்த கிழக்கு மாகாண சபை ஆட்சியை எப்படி நடாத்துவது என்பதுதான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமோ, முஸ்லிம் காங்கிரஸிடமோ, பிரச்சினைகளுக்கு தீர்வு காணத்தக்க வகையில் இந்த மாகாண சபையை அரசியல், இனத் தீர்வுத் திட்ட அடிப்படையில்,அனைத்து மக்களினதும் பங்களிப்பு ஜனநாயகத்தின் ஊடாக ஒரு முன்மாதிரியான சபையாக நாடாத்துவது தொடர்பில் எந்த திட்டமும் இல்லை என்பது உறுதியானது. இருந்திருந்தால் இந்த திட்டத்தினை தமிழ், முஸ்லிம் மக்களிடம் அவர்கள் முன் வைத்திருப்பார்கள். தமிழ், முஸ்லிம் மக்களை வெறும் முதலமைச்சர் விவகாரத்தினைக் காட்டி திசை திருப்பி இருக்கமாட்டார்கள்.

தங்களது அரசியல் தவறுகளையும் பலவீனங்களையும் மறைப்பதற்கு இன உணர்வினை ஆயுதமாகப் பயன்படுத்துவதே அரசியல் தலைமைகளின் வழி முறையாக இருந்து வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பிடுகின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் மட்டுமல்ல, அதனுடைய பெருமளவிலான நிலைப்பாடுகளில் பெரும் தவறுகளை இழைத்து வருவதுடன், அரசியல் நோக்கற்ற,பதவியை மட்டுமே இலக்காகக் கொண்டு சந்தர்ப்பவாதமாக செயற்பட்டு வருகின்ற தன்மையை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறது. கிழக்கு மாகாண சபை விவகாரத்தில் அதனுடைய மேம்போக்கான அணுகுமுறை உடனடி, நீண்டகால நோக்கில் தமிழ் முஸ்லிம் உறவில் ஆழமான பிளவினை ஏற்படுத்தும் கூறுகளை கொண்டிருக்கிறது.

வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் இனத் தீர்வில் அடிப்படையாகக் கண்டடைய வேண்டிய விடயங்களுக்கு முக்கியத்துவமளிக்காது, அந்த இனத் தீர்வை இரு தேசிய இனங்களுடன் பேசி, உடன்பாடு காணப்பட்டு தீர்க்க வேண்டுமென்ற விடயத்தினை புறமொதுக்கி தென்னிலங்கை அல்லது மைய அரசியல் பார்வையிலிருந்து மட்டுமே இந்த விவகாரத்தினை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அணுகியுள்ளது. இது வடக்கு கிழக்கு இனப்பிரச்சினை விடயத்தில் முஸ்லிம்களின் அரசியல் கோரிக்கையை தீர்ப்பதில் தமிழ் முஸ்லிம் அரசியல் தரப்பினரிடையே நடக்க வேண்டிய சினேகபூர்வமான உரையாடலை சிக்கலுக்குள்ளாக்கி இருப்பதுடன் எதிரெதிர் நிலைக்கும் தள்ள அடித்தளமிட்டிருக்கிறது.

கிழக்கு மாகாணசபை தனித்த ஒரு இனத்தின் ஆளுகைக்குள் மட்டும் உட்பட்டதல்ல. அது மூன்று இனங்களினதும் கூட்டினால் ஆழப்பட வேண்டியது. இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் , இன உறவுக்கும் இன சமத்துவத்திற்கும் அவசியமான மாகாணம். இனங்களின் கூட்டாட்சியையும் அதிகார சம நிலையையும் அதன் உண்மையான அர்த்தத்தில் மெய்ப்படுத்திக் காட்ட அதிக வாய்ப்பான ஒரு புவியியல் பிராந்தியம் கிழக்கு மாகாணம்தான். அதிகாரப் பகிர்வில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கான ஒரு தனி அலகு அமைக்கப் பெற்றால் அதன் நிலை வேறானது. இன்றைய நிலையில் அதன் தன்மை வேறானது. இது தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் மட்டுமல்ல, மக்களும் கருத்தில் கொள்ள வேண்டிய உண்மை. தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தினை கோருவதற்கான வாய்ப்பும் உரித்தும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் உள்ளது போல் , கிழக்கில் சுயாட்சி அதிகாரத்தினை கோருவதற்கான வாய்ப்பும் உரித்தும் முஸ்லிம்களுக்கும் உள்ளது. இந்த சுயாட்சி அதிகாரமானது முஸ்லிம்கள் மீது தமிழர்கள் அதிகாரம் செலுத்துவதோ, தமிழர்கள் மீது முஸ்லிம்கள் அதிகாரம் செலுத்துவதாக அர்த்தப்படுத்தக் கூடாது.

இன்றைய நிலையில் கிழக்கு மாகாணத்தில் 2012ம் ஆண்டின் சனத்தொகை புள்ளி விபரத்தின் படி கிட்டிய எண்ணிக்கையில் தமிழ் மக்கள் 40 சதவீதமாகவும் முஸ்லிம் மக்கள் 37 சதவீதமாகவும் சிங்கள மக்கள் 23 சதவீதமாகவும் வாழ்ந்து வருகின்றனர். சிங்கள மக்களின் சனத்தொகைப் பெருக்கம் அரச ஆதரவுடனான திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களால் அதிகரிக்கப்பட்டதாக இருப்பினும் இன்றைய யதார்த்தத்தில் அம்மக்களின் இருப்பும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது அவசியமானது. கிழக்கு மாகாணசபையை பொறுத்தவரை எந்த ஒரு தனித்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையும் இல்லை. ஆட்சி அமைக்க வேண்டுமானால் ஒரு கூட்டாட்சியே சாத்தியமானது. மொத்த 37 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்களும் முஸ்லிம் காங்கிரசுக்கு 07 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 07 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 04 ஆசனங்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 03 ஆசனங்களும் தேசிய காங்கிரசுக்கு 03 ஆசனங்களும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜே. வி. பிக்கும் தலா 01 ஆசனங்களும் உள்ளது. இந்த அணிச்சேர்க்கைகளின் கூட்டு எப்போதும் மாறுபடலாம். ஆகவே இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, முஸ்லிம் காங்கிரசோ தனித்துத்தான் ஆட்சி அமைப்பது என்பது வாய்ப்பற்றது. ஆகவே எந்த ஆட்சி கிழக்கு மாகாணசபையில் அமைந்தாலும் அது பல கட்சிகளின் ஆதரவுடன்தான் அமையப் பெற முடியும்.

இந்த யாதார்த்தத்தினையும் வாய்ப்பினையும் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் திட்டமிட்டு முதலமைச்சர் விவகாரத்தினை தூக்கிப் பிடித்து இரு தரப்பும் தங்கள் மக்கள் எதிர்கொள்கின்ற நீண்ட இன அடக்குமுறை அரசியல் புள்ளியில் ஒன்றுபடாது முரண்படுகின்ற புள்ளியிலே பேசத் தொடங்கினர். இதனால் இந்த விவகாரம் தீர்க்கப்படும் அரசியல் சந்தர்ப்பம் சீர்குலைக்கப்பட்டு விட்டது.

இந்த விவகாரத்தில் ஒரு முன்படியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு முதலமைச்சரை கோரினாலும் ஒரு விடயத்தினை வலியுறுத்தி வந்தது முக்கியமானது. கிழக்கில் அமைக்கப்படும் ஆட்சி தமிழர் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவ இணைவின் சேர்க்கையுடன்தான் அமையப்பெறுவதை விரும்புகிறோம் என்பதாகும்.துரதிருஷ்டவசமாக முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் இருந்து இப்படியான எந்தக் கருத்தும் முன் வைக்கப்படவில்லை என்பதுடன், அது தோற்கடிக்கப்பட்ட மகிந்த அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை பற்றியே பேசி வருகிறது. இப்போதுள்ள ஆட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, இடதுசாரிகள் , முஸ்லிம் கட்சிகளுடன் மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனும்தான் அமையப்பெற்றுள்ள ஆட்சி என்பதை வசதியாக மறந்து விடுகிறது. தமிழ் மக்களும் இந்த ஆட்சி அமையப் பெற மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கி உள்ளனர். இதே முஸ்லிம் காங்கிரஸ் தலைமைதான் மகிந்த தலைமையிலான ஆட்சியில் முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நேர்மையாக அமுல்படுத்தப்படவில்லையென சொல்லி வந்ததை நாம் அறிவோம்.

மகிந்த அதிகாரத்தில் நீடித்து இருந்தால் கிழக்கு மாகாண விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் என்பது ஒரு கனவாகவே கழிந்து போயிருக்கும். அப்படி மகிந்த மறுத்திருந்தால் அதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் தலைமை போராடி இருக்கும் என நம்புவதற்கு இந்த கட்டுரையாளரிடமும் முஸ்லிம் மக்களிடமும் ஒரு சிறு நம்பிக்கையத்தானும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அதனுடைய கடந்த கால அரசியல் செயற்பாடுகளின் வழியாக ஏற்படுத்தி இருக்கவில்லை என்பதே இங்கு முக்கியமாகும்.

மறுபுறம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே புடியாக கிழக்கில் தமது கட்சியை சேர்ந்த ஒரு தமிழர்தான் முதலமைச்சராக வர வேண்டுமென நிலைப்பாட்டினை எடுத்தது அரசியல் விவாதத்திற்குரிய ஒரு அம்சமாகும். இன்றைய வடக்கு மாகாண சபையின் முழு ஆட்சி அதிகாரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே உள்ளது. இன அடிப்படையில் பார்த்தால் 1989 இல் அமைந்த இணைந்த வடகிழக்கு மாகாண ஆட்சியில் ஒரு தமிழரே முதலமைச்சராக இருந்திருக்கிறார். பின்னர் கிழக்கில் தனியாக அமைந்த மாகாண ஆட்சியில் கிழக்கு தமிழர் ஒருவரே முழுக்காலமும் முதலமைச்சராக இருந்திருக்கிறார். மூன்றாவது முறையாக அமைக்கப் பட்ட மாகாண சபையில்தான் ஒரு முஸ்லிம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் இரண்டரை வருடங்கள் பதவியில் இருந்துள்ளார். மற்ற பதவிக் காலத்திற்கும் இன்னொரு முஸ்லிம் முதலமைச்சருக்கு வாய்ப்பு வழங்குவதில் என்ன தவறு என கேட்கப்படுவதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்.

இந்தக் கட்டுரையாளர் வலியுறுத்தும் விடயம் யார் முதலமைச்சர்?அவர் எந்த இனத்தினை சேர்ந்தவர்? என்பதற்கும் அப்பால் கிழக்கு மாகாணசபை அதன் இருப்பின், வரலாற்றுப் பொறுப்பின் அடிப்படையில் அது கொண்டிருக்க வேண்டிய இலக்குகள், திட்டங்கள், செயற்பாடுகள் என்ன என்பதே பிரதானமானது என்பதை முதன்மைப் படுத்துவதேயாகும். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் செய்யத் தக்க உடனடியான வேலைத்திட்டங்களும் நீண்டகால நோக்கிலான கருத்தியல் வடிமைப்புகளும் திட்டமிடல்களும் இல்லாது விட்டால் , யார் முதலமைச்சராக இருந்தால் என்ன, மக்களுக்கு எந்த பெரிய நன்மையையும் கிடைக்கப்போவதில்லை .ஏற்கனவே முரண்பாடு கண்டிருந்த கிழக்கு தமிழ் முஸ்லிம்களுக்கு இடையிலான உறவில் இந்த முதலமைச்சர் விவகாரம் மேலும் கீறலை ஏற்படுத்தி இருக்கிறது . மேலும் பாதகமாக நிலைமை மாறுவதனைத் தடுப்பது தமிழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் மிக முக்கிய பொறுப்பாக பொறுப்பாகும். காயங்களை ஆற்றப்போகிறோமா ? அல்லது மேலும் ஆழப்படுத்தி ஆறாத புண்ணாக்கப் போகிறோமா ? என்பது பிரதானமானது. காயங்கள் ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமானால் நமது பார்வைகளும் , பரிந்துரப்புகளும் அதனை நோக்கியே இருத்தல் வேண்டும். இதில் கருத்திற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாக

0. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு
0. வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு,
0 தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான புரிதலும் ஐக்கியமும்
0.சிங்கள மக்களின் இருப்பும் அரசியல் உத்தரவாதமும் முக்கியமாகிறது.

இவற்றினை முன் கருத்தியலாகக் கொண்டு அமையப் பெறுகின்ற கிழக்கு மாகாண சபை

  • ஒரு ஐக்கிய மாகாணசபையாக அமைக்கப்படுதல் வேண்டும். இதில் அனைத்து கட்சிகளினதும் அனைத்து இனங்களினதும் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படல் வேண்டும்.அமைச்சரவையே கூட்டு பொறுப்பு வகிக்க வேண்டும்.
  • யாரையும் யாரும் ஆளுகின்ற ஒரு மாகாணசபையாக இல்லாது எல்லோரின் கூட்டுப் பங்களிப்பினால் வழி நடாத்தப்படுகின்ற ஒரு சபையாக இது நடைமுறையில் இருக்க வேண்டும்.
  • அமைச்சரவை பொறுப்புகள் அனைத்து இனங்களினது பிரதி நிதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.இந்த அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உள்ளடக்குவது அவசியமானதாகும்.
  • கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மாகாண வளங்கள் , ஓதுக்கீடுகள், வேலை வாய்ப்புகள் நீதியாக பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.
  • தமிழ், முஸ்லிம்களின் இன உறவுக்கு சிறந்த அடித்தளத்தினை கட்டும் நோக்கை முதன்மை படுத்தல் வேண்டும்.
    00000000

தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளும்- தமிழ், முஸ்லிம் சிவில் சமூகமும் கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் இதில் உள்ளன.

முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிவில் சமூகமும்

• கிழக்கு தமிழ் மக்களுக்கும், அவர்களது அரசியல் பிரதி நிதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆட்சியில் பங்கு கொள்வதற்கான முழு உரிமையும் உள்ளது. 12 பிரதி நிதித்துவத்துடன், கடந்த மாகாண சபைத் தேர்தலில் 33 சத வீதமான வாக்களிப்பினை கிழக்கு தமிழ் மக்கள் வழங்கி உள்ளனர்.

• அமைகின்ற கிழக்கு மாகாண சபையில் அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு பங்கெடுக்க தமிழ் அரசியல் தலைமைகளை நேசக்கரம் நீட்டி அழைக்க வேண்டும். இந்த அழைப்பு இப்போது முஸ்லிம் தரப்பில் இருந்தே செய்யப்படல் வேண்டும்.

• தமிழ் மக்கள் நடாத்திய போராட்டம் வழியாகவே இந்த மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டது. இந்தப் போராட்டத்தின் காரணமாக கிழக்கு தமிழ் மக்கள் பெரும் இழப்பினை சந்தித்து வந்திருக்கின்றனர். அவற்றினை நிவர்த்திப்பதற்கான அரசியல் வாய்ப்பு கிழக்கு தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும், அதனை உறுதிப்படுத்துவதும் முஸ்லிம் தரப்பின் பொறுப்பாகும்.

• அரசியல் வாய்ப்பிருந்தும் மத்திய அரசில் அமைச்சர்களாக வருவதனை கொள்கை அடிப்படையில் ஏற்காதவர்கள் அவர்கள் என்பதனை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்தல் வேண்டும். முஸ்லிம் மக்கள் மத்திய அரசில் அங்கம் வகிப்பதன் ஊடாக அரசியல் பலத்தினையும் அபிவிருத்தி வாய்ப்புகளையும் கொண்டிருக்கின்றனர். குறைந்தபட்சம் மாகாண மட்டத்தில் அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவது அவசியமானதாகும்.

• முஸ்லிம் அரசியல் தலைமைகளும், மக்களும் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளுக்கு, கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்காது இருக்கலாமேஒழியே ஒரு போதும் தடையாக இருந்து விடக்கூடாது.

• வடக்கு கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் ஓரு புவியியல் பிராந்தியத்தில் தமிழ் மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ வேண்டியவர்கள் என்பதனை கவனத்திற் கொள்தல் வேண்டும். சிங்கள மைய அரசியல் தலையீடுகளும், தென்னிலங்கை முஸ்லிம் தலைமை சிந்தனையும் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை பிரித்தாளவே முயலும் என்பதை கவனத்தில் இருத்துதல் முக்கியம்.

• தமிழ் அரசியல் தலைமைகள் தமது அதிகார இருப்பினை தக்க வைப்பதற்காக செய்கின்ற தவறுகளை.. சாதாரண தமிழ் மக்களுடன் தொடர்புபடுத்தி பார்க்க முயலக் கூடாது. தமிழ் மக்களுடன் உரையாடுவதற்கான புதிய பொறிமுறையை பற்றி சிந்திக்க வேண்டும்.

தமிழ் அரசியல் தலைமைகளும் சிவில் சமூகமும்

• அமைகின்ற கிழக்கு மாகாண சபையில் அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு பங்கெடுக்க முன்வர வேண்டும்.

• வடக்கு கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அவர்களின் இருப்பு, பாதுகாப்பு, அரசியல் தீர்வு உத்தரவாதம் தொடர்பில் நியாயமாக அவர்களுக்கு இருக்கின்ற விடயங்களுக்கு தெளிவான முன் வைப்புகளை வழங்குதல் வேண்டும்.

• கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டில் உள்ள முக்கிய அம்சம் வழங்களை இரு சமூகங்களிடையேயும் பகிர்ந்து கொள்வதாகும். இதில் நிலப்பிரச்சினை, மீள்குடியேற்றம் பிரதானமாக இருக்கிறது. இவற்றினை தீர்த்துக் கொள்ள உடனடி பொறி முறை ஒன்றை முன் மொழிதல் வேண்டும்.

• முஸ்லிம்களுக்குள் நிலவுகின்ற அரசியல் தலைமைத்துவ போட்டி, தென்னிலங்கை சார் நலன் தொடர்பான அணுகுமுறைகளை கவனத்தில் கொள்தல் வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது அதிகார இருப்பினை தக்க வைப்பதற்காக செய்கின்ற தவறுகளை.. சாதாரண முஸ்லிம் மக்களுடன் தொடர்புபடுத்தி பார்க்க முயலக் கூடாது. முஸ்லிம் மக்களுடன் உரையாடுவதற்கான புதிய பொறிமுறையை பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்த பணியினை செய்வதற்கு தமிழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் முன்கையெடுப்பு இன்று மிக அவசியமானது. இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் முஸ்லிம் காங்கிரசையும் பேச்சுவார்த்தை மேசைக்கு உடன் கொண்டு வர வேண்டும் .முதிர்ச்சியுடன் கூடிய பார்வையை ஏற்படுத்த வேண்டும்.

அதற்கான அனைத்துவகை அழுத்தங்களும் அவசியம். முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை புறம் தள்ளி ஆட்சியை தொடருமானால் கிழக்கில் உதிக்கும் சூரியன் ஒளிகுன்றியே வருவான். நான் ஏலவே வலியுறுத்தியது போல் இதற்கான அனைத்து வரலாற்று பின்விளைவுகளையும் முஸ்லிம் சமூகம் அதிகம் ஏற்க வேண்டி இருக்கும். நிலைமைகளை சரியாகக் கையாள்வதற்கான அழுத்தத்தினை தமிழ் முஸ்லிம் சிவில் சமூகம் வழங்க வேண்டும். இச்சிவில் சமூகங்களும் அரசியல்வாதிகளின் இன நிலைப்பாடு சார்ந்த பார்வைக்குப் பின்னால் அள்ளுண்டு செல்லக் கூடாது.. இதில் எரிந்த கட்சி, எரியாத கட்சி நிலைப்பாட்டுவாதம் ஆரோக்கியமானதல்ல.

Advertisements

Comments

  1. Mr Gamage of Amapara could have been appointed as a chief minister to show our good will. After all this post is only for two years and virtually provincial council has no power.
    Dr M.L.Najimudeen

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: