Advertisements

றிஷாத் மற்றும் அமீரலிக்கு அப்துல் வஹாபின் திறந்த மடல்

risad_Bathiudeenஅன்புடன் சகோதரர் றிசாத் பதியுதீன் சகோதரர் அமீரலி அவர்களே..!

ஜனாதிபதி தேர்தல் வெற்றியினை உங்களது வெற்றியாகக் கொண்டாடுவதில் மும்மூரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மக்களின் நலன்களின் பால் நின்று சுட்டிக்காட்ட வேண்டிய சில முக்கிய விடயங்ககளை முன்வைப்பதற்காக இப்பகிரங்கக் கடிதத்தை எழுதுகின்றேன்.

இப்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் வெற்றிக்கு மக்களே சொந்தக்காரர்கள் என்பதும் அதனை உருவாக்குவதற்கு உங்களைப் போன்றவர்கள் எவ்வித தியாகத்தையும் பங்களிப்பையும் செய்யவேண்டிய நேரத்தில் செய்யவில்லை என்பதும் நாடறிந்த உண்மையாகும்.

சகோதரர் றிசாத் அவர்களே..!

முஸ்லிம்கள் எதிர் கொண்ட மிகச்சிக்கலான சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களுக்காகப் பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டிய முறையில் நீங்கள் பேசவில்லை. மட்டுமின்றி அவ்வாறு பேசுவதற்கு முன்வந்தவர்களைக்கூட தடுக்கின்ற ஒருவராகவே நீங்கள் இருந்திருக்கின்றீர்கள்.

உதாரணமாக முஸ்லிம்களுக்கெதிரான பொதுபல சேனாவின் இனவாத அச்சுறுத்தல்கள் உச்சகட்டத்தில் இருந்த வேளை எதிர்கட்சித்தலைவர் என்ற வகையில் முஸ்லிம்களுக்காக பேசுவதற்காக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில்  எழுந்து நின்றார். அவ்வேளையில் அவரது பேச்சுக்கு இடையூறு செய்து அதனைத் தடுக்கின்ற முயற்சியை நீங்கள்தான் செய்தீர்கள். இதுதான் வரலாறாகும்.

ஆக மக்களின் துன்பங்களுக்கான தீர்வாக இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு உரிய நேரத்தில் நீங்கள் எவரும் முன்வரவில்லை என்பது மாத்திரமின்றி மஹிந்தவின் அராஜக அரசிற்கு ஆதரவளித்து அதன் சுகபோகங்களை அனுபவிக்கின்றவர்களாகவே நீங்கள் இறுதிவரை இருந்தீர்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் தேசப்பற்றுமிக்க ஒருசில தலைவர்களாலும் இந்த நாட்டு மக்களாலும் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்திற்கான உழைப்பு நிச்சயம் வெற்றி பெறப்போகிறது என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர்தான் நீங்கள் வெற்றியின் பக்கம் இணைந்து கொண்டீர்கள்.

இப்போது மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இறைவனின் உதவியோடு நிகழ்ந்து விட்டது. எதற்காக இந்த மாற்றத்தை மக்கள் எதிர் பார்த்தார்களோ அந்த விளைவுகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அரசாங்கத்தில் நீங்களும் பங்காளியாகி விட்டீர்கள். மாற்றத்தின் மூலமாக மக்களின் நலன் சார்ந்த நேர்மையான ஆட்சி ஒன்றினையே மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ஊழல் மோசடிகள் இல்லாத, மக்களின் நலன்களைச் சுரண்டாத, அதிகாரத் துஸ்பிரயோகம் செய்யாத, அரசியல் வன்முறைகள் அற்ற, மற்றும் குடும்ப ஆட்சி முறை இல்லாத ஒரு சிறந்த ஆட்சியினையே மக்கள் எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.

ஆனால் ஒரு அராஜக ஆட்சியினை நடாத்திய மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்து அந்த அரசாங்கத்திற்கு துணை போனது மட்டுமல்லாமல் அந்த மக்கள் விரோத செயற்பாடுகளில் தாமும் பங்கெடுத்த பலர் இன்று புதிய ஆட்சியில் மீண்டும் பங்காளிகளாக வந்திருப்பது மாற்றத்தை எற்படுத்திய மக்களுக்கு நம்பிக்கையீனத்தை  ஏற்படுத்துகின்றது.

அப்படியானவர்களில் ஒருவராக நீங்களும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது முஸ்லிம் சமூகம் கவலைப்பட வேண்டிய ஒரு விடயமாக மாறியிருக்கிறது.

நேர்மையான அரசியலுக்கு முன்னுதாரணமாக சொல்லக்கூடிய ஒருவர்தானும் நமது சமூகம் சார்பாக இந்த அரசாங்கத்தில் இல்லையே என்பது பெரும் வெட்கத்துக்குரிய விடயமாக மாறியிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் சில விடயங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.

மக்கள் மாற்றியமைக்க நினைக்கும் சமூக விரோத மார்க்க விரோத பிற்போக்கு அரசியல் நிலவரங்களை முஸ்லிம் அரசியலில் முன்னின்று செய்பவர்களாக உங்களைப் போன்றவர்கள் இருக்கிறீர்கள்.

நாட்டில் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு நல்ல அரசியல் மாற்றம் முஸ்லிம் சமூகத்திலும் நிகழ வேண்டும் என்றே முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக விரும்புகின்றது.

ஆனால் அதற்கு உங்களது கடந்த கால நடவடிக்கைகளும், தற்போதைய நடை முறைகளும் பெரும் முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. அந்த வகையில் பின்வரும் விடயங்களை சுருக்கமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

MSS. Ameer Aliமக்களின் நலன்களைச் சுரண்டும் ஊழல் மோசடிகள்:

அரசியல் என்பது மக்களின் நலன்களுக்காகவே 100வீதம் செயற்பட வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும். ஆனால் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் நலன்களைச் சுரண்டி பொது நிதியினைக் கொள்ளையடிக்கின்ற பெரும் வியாபாரமாகவே  தற்போதைய அரசியல் மாறியிருக்கிறது. முஸ்லிம் அரசியலில் நீங்கள் இதற்கு நல்ல உதாரணமாகும்.

வடக்கு முஸ்லிம்களின் அகதி வாழ்க்கையையே உங்களின் அரசியலுக்கான மூலதனமாக இதுவரை காலமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த அகதி மக்கள் நிம்மதியாகக் குடியேறி தாம் இழந்தவற்றை மீண்டும் பெற்று வளமாக வாழுகின்ற நிலை இன்னும் ஏற்படவில்லை. இன்னும் பலர் அகதி முகாம்களிலும் அதே போன்று மீள்குடியேறிய மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமலும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நீங்களும் உங்களது குடும்பமும் இது போன்ற கஸ்டங்களுடன் வாழ்ந்து அகதிகளாக இருந்த நிலையில்தான் அரசியலைத் தொடங்கியதாக பல சந்தர்ப்பங்களில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.

அப்படியென்றால் எந்த மக்களுக்காக அரசியல் நடாத்துவதாக சொல்கின்றீர்களோ அந்த மக்களில் ஏராளமானவர்கள் இன்னும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் உங்களால் மாத்திரம் எப்படி கோடீஸ்வர்களாக மாற முடிந்தது..?

அகதி மக்களுக்கான வீடுகள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை ஆனால் நீங்களும் உங்கள் உறவினர்களும் பலகோடிப் பெறுமதியான வீடுகளுக்கு கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் சொந்தக்காரர்களாக மாறியிருக்கின்றீர்கள்.

மன்னார் மறிச்சிக்கட்டி போன்ற பிரதேசத்தைச் சேர்ந்த அகதிகள் தமது சொந்தக் காணியை இழந்து விட்டு நடுவீதியில் அனாதரவாக நிற்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு உங்களால் காணி பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஆனால் பல ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கு உங்கள் சகோதரர்களும் உறவினர்களும் சொந்தக்காரர்களாக மாறியிருக்கிறார்கள்.

அன்றாட கௌரவமான ஜீவனோபாயத்திற்கான தொழில்களை அமைத்துக் கொள்ள முடியாமல் வடக்குப் பகுதியில் இன்னமும் மக்கள்  அல்லல்படுகிறார்கள். ஆனால் எவ்வித தொழில்களும் இல்லாதிருந்த உங்கள் சகோதரர்களும் உறவினர்களும் மக்களால் கிடைத்த அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரமாண்டமான கொந்தராத்துக் கம்பனிகளுக்கு சொந்தக்காரர்களாக மாறியிருக்கிறார்கள்.

அதே போல் வடக்கு மக்களின் வனவளங்களையும் மண் வளங்களையும்  பாரிய அளவு நாசம் செய்கின்ற வியாபாரத்தை உங்களின் அரசியல் அணுசரணையோடு உங்கள் உறவினர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. வடக்கு முஸ்லிம்களுக்கென கட்டப்பட்ட வீடுகள் பலவற்றை உங்களின் ஆதரவாளர்களுக்கு அநியாயமாகப் பங்கு வைத்திருக்கிறீர்கள்.

அமீரலி அவர்களே..!

அது போலவே கல்குடா பிரதேசத்தில் நடந்த பல்வேறு அபிவிருத்திகளில் உங்களின் அணுசரணையோடு பல்வேறு ஊழல் மோசடிகள் நடந்ததனை  அப்பிரதேச மக்கள் ஊர்ஜிதம் செய்கிறார்கள். அப்பிரதேசத்தில் முஸ்லிம்களின் குடியேற்றம் என்ற போர்வையில் பலநூறு ஏக்கர் காணிகளை உங்கள் உறவினர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களைப் போன்றவர்களின் அரசியல் சுய நலமானதென்பதனை அம்பலப்படுத்தும் எனது அண்மைய அவதானத்தையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

அதாவது சமூகத்திற்காகவே பாராளுமன்றப் பதவியை பொறுப்பேற்றதாக அமீரலி அவர்களே நீங்கள்; சொன்னீர்கள். இதை மக்களும் நம்பியிருக்கக்கூடும். ஆனால் பா.உ பதவியை பொறுப்பெடுத்த மறு தினம் நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கை உங்களின் சுயரூபத்தை வெளிசச்ம் போட்டுக் காட்டியிருக்கிறது.

பா.உ பதவியைப் பொறுப்பேற்றவுடன் உங்களின் முதற்காரியமாக ஆடம்பர வாகன இறக்குமதிக் கோட்டாவைப் பெற்றுக் கொண்ட நீங்கள் அதனைப் பல மில்லியன் ரூபாய்க்கு விற்று சுளையாகப் பணத்தை பெற்றுக் கொண்டீர்கள். எனக்குக் கிடைக்கும் நம்பகமான தகவல்களின் படி மக்களின் பெயரால் கிடைத்த இந்தப் பதவி மூலம் உங்களுக்கு உடனடியாகக் கிடைத்த இலாபம் 1 கோடி 70 இலட்சம் ரூபாய் ஆகும்.

இதே காலப் பகுதியில் உங்கள் பிரதேச மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வீடுகளை விட்டு வெளியேறிய நூற்றுக் கணக்கானவர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லமல் துயரப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் மக்களின் பதவி மூலம் பாரிய தொகையைப் பெற்றுக் கொண்ட நீங்கள் அதை மக்களுக்காக செலவு செய்வதற்கு சிறிதும் முன்வரவில்லை. இது அண்மைய உதாரணம் மட்டுமே..!

இது போன்று அமானிதமாகக் கிடைக்கும் மக்களின் பதவிகளைப் பயன்படுத்தி கடந்த காலங்களில் கோடிகோடியாக பணம் சம்பாதித்த பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

இப்படியான ஊழல் மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோக செயற்பாடுகள் காரணமாகத்தான் தற்போதைய அரசாங்கத்திலிருக்கும் நேர்மையான அரசியல் வாதிகள் பலரும் உங்களைப் போன்றவர்களை வித்தியாசமான சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். உங்களைப் போன்றோருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கோவைகள் பல தயாரிக்கப்பட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.

நம்பிக்கைத் துரோகம்:

நேர்மையான அரசியல் என்பது மக்களுக்கு விசுவாசமான ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால்> உங்களைப் போன்றவர்களின் அரசியல் வரலாறு இப்படியான ஒன்றல்ல.

அமீரலி அவர்களே..!

உதாரணமாக எப்படியாவது தேர்தலை வெல்ல வேண்டும் என்ற  தேவையிலிருந்த நீங்கள் முஸ்லிம் காங்கிரஸைப் பயன்படுத்திக் கொண்டீர்கள். முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை நம்ப வைப்பதற்காக ‘நான் ஒரு போதும் கட்சியிலிருந்து விலக மாட்டேன்’ என்று உறுதி மொழி வழங்கினீர்கள். உங்களது வாக்குறுதி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக, ‘நான் SLMC யைவிட்டு வெளியேறினால் அது எனது தாயோடு சினா செய்வதாகும்’ என்று கூறி மக்களை நம்பவைத்ததாக உங்கள் பிரதேச மக்கள் உறுதி செய்கிறார்கள்.

ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்து பதவிக்கு வந்து ஒரு குறுகிய காலத்தில் SLMC யைவிட்டு வெளியேறி வாக்குறுதியை மீறிய அந்த நம்பிக்கைத் துரோகத்தை செய்தீர்கள்.

அது போலவே கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபையில் இருந்த நீங்கள் உங்களின் சகாக்களான சுபைர் மற்றும் சிப்லி பாறூக்கை இணைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டு சுயாதீனமாக இயங்கப்போவதாக அறிவித்தீர்கள். சமூகத்திற்காகவே இதனைச் செய்வதாக உங்களது சக மாகாண சபை உறுப்பினர்களுக்கும் வாக்களித்தீர்கள். அவர்களும் அதனை நம்பினார்கள்.

ஆனால் இந்த அரசாங்கம் உங்களை அழைத்து பா.உ பதவி தருவதாகச் சொன்னபோது உங்களை நம்பியிருந்த மாகாண சபை உறுப்பின்களிடம் எதுவும் சொல்லாமல் அந்தப் பதவியைப் பாரமெடுத்து மஹிந்தவுக்கு ஆதரவு தருவதாக வாக்குறுதியளித்தீர்கள். யாரிடமும் எதுவும் சொல்லாமல் தொலைபேசிக்குக் கூட பதிலளிக்காமல் நீங்கள் மிகவும் முனாபிக் தனமாக நடந்து கொண்டதாக உங்களின் சக மாகாண சபை உறுப்பினர் ஒருவரே தெரிவித்திருக்கிறார்.

இப்படி உங்களை நம்பி அரசாங்கத்தை விட்டு வெளியேறிய உங்கள் மாகாண சபை உறுப்பினர்களோடு விசுவாசமாக நடந்து கொள்ளாத நீங்கள் பின்னர் உங்களை நம்பி பா.உ பதவியை வழங்கிய மஹிந்தவுக்கும் துரோகம் செய்தீர்கள்.

ஏனெனில் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே பா.உ பதவி உங்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் அதனைப் பெற்றுக் கொண்டு அவரை எதிர்ப்பதானது இஸ்லாத்தின் பார்வையில் துரோகத்தனமானதே..

சமூகத்திற்காக இதனைச் செய்வதாக தயவு செய்து இதனை நியாயப்படுத்த வேண்டாம். ஏனெனில் எதிரிக்குக் கூட நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடாது என்பதும் சமூக நன்மைகளின் அடிப்படையில் நம்பிக்கைத் துரோகத்தினை நியாயப்படுத்த முடியாது என்பதும் இஸ்லாத்தின் தெளிவான நிலைப்பாடாகும்.

றிசாட் அவர்களே..!

அண்மைய தேர்தலைத் தொடர்ந்து நீங்கள் கொழும்பில் நடாத்திய நிகழ்வொன்றில் கூட உலமாக்களுக்கும் பொது மக்களுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு ஏமாற்றப்பட்டதாக மற்றுமொரு செய்தியிருக்கிறது.

அதாவது ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் கலந்து கொள்வார்கள் என வாக்குறுதியளித்து உலமாக்களையும் புத்திஜீவிகளையும் அந்த விழாவுக்கு நீங்கள் அழைத்திருக்கிறீhகள். ஆனால் அப்படி யாரும் அங்கு வரவுமில்லை. அதற்கான ஏற்பாடுகளும் இருக்கவுமில்லை.

நடந்து முடிந்த மாற்றத்திற்கு கதாநாயகன் நீங்களே என்பது போன்ற போலியான தோற்றப்பாட்டை உருவாக்குவாக்குவதனை நோக்கமாகக் கொண்ட நிகழ்வாகவே அது இருந்தது.

உங்களால் பணிக்கப்பட்டவர்களாலும் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களாலும் உங்களுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு நீங்கள்தான் இந்த மாற்றத்திற்கு தலைமை தாங்கியவர் போன்று பாராட்டப்பட்டுள்ளீர்கள்.

உங்களைப் போன்றவர்களுடைய அரசியல் தலைமைத்துவங்களைப் புறக்கனித்து மக்களாகவே ஏற்படுத்திக் கொண்ட மாறற்த்தின் வெற்றியினை இப்படி சில்லறைத்தனமாகக் களவாடுகின்ற உங்களின் முயற்சியைக்கண்டு உலமாக்களும் புத்திஜீவிகளும் அருவருப்புப்பட்டனர்.

புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பெயர்களைப் பாவித்து இப்படி உலமாக்களையும் கௌரவமானவர்களையும் ஏமாற்றியிருக்கக் கூடாது என பலரும்  பகிரங்கமாகக் கண்டித்தனர்.

உங்கள் குடும்பத்தைப் பலப்படுத்தும் அரசியல்:

தனது குடும்ப உறவினர்களை தகுதி தராதரங்கள் பாராது அரசியல் அதிகாரத்திலும் ஏனைய பதவிகளிலும் அமர்த்தியதுதான் மஹிந்தவின் ஆட்சியை மக்கள் தோற்கடிப்பதற்கான மற்றுமொரு பிரதான காரணமாகும்.

மஹிந்த ராஜபக்ச தேசிய மட்டத்தில் செய்த இது போன்ற குடும்ப அரசியலுக்கு ஒப்பாகவே உங்களது பிரதேச மட்ட அரசியலும் இருக்கிறது. சில அவதானங்களை இதற்கு உதாரணமாக எடுக்கலாம்;

றிசாட் அவர்களே..!

மன்னார் மாவட்டத்தில் உங்களுக்கு அடுத்ததாக எதிர்கால தலைமைத்துவத்திற்கு தகுதியான ஒரு மக்கள் பிரதிநிதியாக உனைஸ் பாறூக் இனை மக்கள் தெரிவு செய்தார்கள். இதனைப் பொறுக்க முடியாத நீங்கள் கடந்த வடமாகாண சபை தேர்தலின் போது உங்கள் தம்பியை தேர்தலில் இறக்கி மாகாணசபை உறுப்பினராக மாற்றி இருக்கின்றீர்கள். மட்டுமின்றி படிப்படியாக உனைஸ் பாறூக்கை ஓரங்கட்டினீர்கள்.

நடந்து முடிந்த தேர்தலில் மஹிந்தவின் வெற்றிக்காக முதன்முதலாக ஆரம்பத்திலேயே பொது எதிரணியில் இணைந்து கொண்ட ஒருவராக உனைஸ் பாறூக் இருக்கின்ற  போதிலும் புதிய அரசாங்கத்தில் அவருக்கு எவ்வித அமைச்சுக்களும் கிடைப்பதனை இது வரை தடுத்திருக்கின்றீர்கள்.

புதிய அரசாங்கத்தில் உனைஸ் பாறூக் போன்றவர்கள் பெற்றுக்கொள்ளும் அமைச்சுப் பதவிகளும் கூட முஸ்லிம் சமூகத்திற்கு பிரயோசனமானதாக அமையும் என்ற பரந்த சமூக நோக்கு இருந்திருக்குமேயானால் இப்படி சுயநலமாக நடந்திருக்க மாட்டீர்கள்.

இத்தனைக்கும் உங்களது தம்பியின் தராதரங்களோடும் ஆளுமையோடும் ஒப்பிடும் போது உனைஸ் பாறூக் எவ்வளவோ மேலானவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆகவே மஹிந்த செய்ததைப்போலவே கீழ்த்தரமான உங்களின் குடும்ப அரசியலின் காரணமாக தகுதியானவர்கள் சமூகப் பிரதிநிதிகளாக வருவது தடுக்கப்பட்டது. இது ஒரு விரிந்த பார்வையில் சமூக விரோத நடவடிக்கை என்றும் சொல்லலாம்.

அது போலவே தான் உங்களது அமைச்சு அதிகாரம் சம்மந்தப்பட்ட பல பதவிகளில் உங்களது உறவினர்களையும் உங்களுக்கு நெருக்கமானவர்களையும்தான் வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். தகுதி மற்றும் தராதரங்களின் அடிப்படையில் இவற்றை நீங்கள் செய்ய வில்லை. வெளிநாட்டு தூதுவராலயங்களில் பதிவிகளுக்கும் உங்கள் சகோதரியின் கணவர் உள்ளிட்ட உறவினர்களைத்தான் நியமித்திருந்தீர்கள். மஹிந்த செய்ததைப்போல..

அமீரலி அவர்களே..!

அமைச்சர் றிசாட்டின் குடும்ப அரசியலோடு ஒப்பிடும் போது உங்களது நடவடிக்கைகளும் குறைந்ததல்ல. இதற்கு ஒரு கிட்டிய உதாரணத்தைச் சொல்லலாம்.

நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் உங்களுக்கு ஈடான பலர் கல்குடாவில் இருந்த போதிலும் அவர்களை நீங்கள் உள்வாங்கவில்லை. உங்கள் மச்சானைத்தான் (சகோதரியின் கணவர்) போட்டியிடச் செய்தீர்கள்.

நீங்கள் பா.உ பதவியினைப் பாரமெடுப்பதற்காக மாகாண சபை பதவியை ராஜினாமாச் செய்த போது உங்களது மச்சானைத்தான் இப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பதனையும் ஒரு நிபந்தனையாக மஹிந்த அரசாங்கத்திடம் முன்வைத்தீர்கள்.

கல்குடா பிரதேச மக்களினதும் ஏனைய மக்களினதும் பிரச்சினைகள் பல பற்றி மஹிந்த அரசாங்கத்திடம் பேச வேண்டிய தருணத்தில் அவைபற்றியெல்லாம் பேசாது உங்களது மச்சானின் பதவி பிரச்சினையைத்தான் நிபந்தனையாகப் பேசினீர்கள்.

அது போலவே நீங்களும் அமைச்சு அதிகாரங்களிலிருந்த காலத்தில் முக்கியமான பதவிகளில் தகுதி தகைமைகள் இல்லாத உங்களின் சகோதரர்களையும் உறவினர்களையுமே அமர்த்தினீர்கள். இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம். ஆக மக்கள் தோற்கடித்த மஹிந்த குடும்ப அரசியல் பாணியிலேயே உங்களைப் போன்றவர்களின் அரசியல் தொடர்கிறது.

அரசியல் வன்முறைகளும் அதிகார துஸ்பிரயோகங்களும்:

அதிகாரத்திலிருந்த மஹிந்த அவர்கள் தமக்கெதிரான கருத்துடையோருக்கு எதிராக மேற் கொண்ட வன்முறைகள் அதிகாரத் துஸ்பிரயோகங்களை மக்கள் நிராகரித்ததன் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டது.

ஆனால் இது போன்ற வன்முறைகளையும் அதிகாரத் துஸ்பிரயோகங்களையும் செய்கின்ற அரசியலாகத்தான் உங்களது அரசியலும் இருக்கிறது.

றிசாட், அமீரலி அவர்களே..!

உங்களது மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.. உங்களை விமர்சித்த உங்களுக்கு எதிராக கருத்துச் சொன்ன நபர்களைக் குறிவைத்து நீங்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் எத்தனை..? அடாவடித்தனங்கள் எத்தனை..? அரசியல் பழிவாங்கல்கள் எத்தனை..? அது போலவே உங்களது பதவிகளைப் பாதுகாப்பதற்காகவும் தமது சொந்த இலாபங்களுக்காகவும் கிரிமினல் நடவடிக்கைளில் ஈடுபட்ட உங்களது உறவினர்களைப் பாதுகாக்க நீங்கள் மேற் கொண்ட அதிகாரத் துஸ்பிரயோகங்கள் எத்தனை..?

உதாரணமாக நீங்கள் அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் அரசாங்க உயர் பதவிகளில் இருந்த உங்கள் சகோதரர்கள் செய்த கிரிமினல் நடவடிக்கைகளில் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட போது அவர்களை பாதுகாப்பதற்காக உங்கள் அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தினீர்கள். அது போலவே உங்களுக்கு நெருக்கமான பலரின் கிரிமினல் நடவடிக்கைகளுக்கான ஆதாரங்கள் சிக்கிய சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களைப் பாதுகாப்பதற்கு மக்களால் அமானிதமாக வழங்கப்பட்ட அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்தீர்கள்.

கடந்த தேர்தலின் பின்னரும்கூட உங்களுக்கு எதிரான அரசியல் கருத்தைக் கொண்டோர் மீது மன்னாரில் தாக்குதல் நடத்தியிருக்கிறீர்கள். தாக்கப்பட்டவர்கள் பலநாள் வைத்திய சிகிச்சை பெற்ற போதிலும் தாக்கியவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வில்லை. இந்தத் தாக்குதல் உங்களின் அதிகாரப் பின்னணியோடுதான் நடந்திருக்கிறது என்பதை நிரூபிக்க இதுவொன்றே போதுமானதாகும்.

எனவே மஹிந்தவின் அரசியல் வன்முறைகள் மற்றும் அரசியல் அதிகார அனுசரணையோடு மேற்கொள்ளப்பட்ட கிரிமினல் நடவடிக்கைகள் என்பவற்றிக்கு ஒப்பானதாகவே உங்களது அரசியல் கலாசாரம் இருக்கிறது.

மேலும் மஹிந்த அற்ப அரசியல் இலாபங்களுக்காக இனவாதம் பேசியது போலவேதான் உங்களது இனவாத அரசியலும் பிரதேச வாத அரசியலும் காணப்படுகிறது.

கல்குடா பிரதேசத்திலும் மன்னார் பிரதேசத்திலும் முன்னெடுக்கப்படும் உங்கள் அரசியல் இனவாதமும் பிரதேச வாதமும் பேசுகின்ற அரசியலாகவே இன்னமும் இருக்கின்றது.

எனவே மக்களால் எற்படுத்தப்பட்ட இந்த மாற்றத்தின் வெற்றியினை களவாடிச் செல்வதற்கு நீங்கள் இனிமேலும் முயற்சி செய்யக்கூடாது. அத்தோடு பலரது தியாகத்தை மூல தனமாகக் கொண்டு உருவான இந்த வெற்றி நிச்சயமானதன் பின்னரே இதில் பங்கு போடுவதற்காக இணைந்து கொண்டவர்கள்தான் நீங்கள் என்பதனையும் இதில் உண்மையான பங்காளிகள் நீங்களல்ல என்பதனையும் நீங்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது.

அத்தோடு மக்கள் தோற்கடித்த மஹிந்தவின் மக்கள் விரோத அராஜக அரசியலின் அத்தனை பண்புகளும் உங்களது அரசியலிலும் தாராளமாக இருக்கின்றன என்பதனையும் நீங்கள் மறந்து விடக்கூடாது.

அதற்காகத்தான் மேலே உள்ள விடயங்களை நான் விலாவாரியாகச் சுட்டிக்காட்டி இருக்கிறேன். இது உங்கள் மீதான தனிப்பட்ட கோபதாபங்களின் காரணமாக சொல்லப்பட்டவையல்ல. மாற்றமாக உங்களின் அரசியலினை நீண்ட காலமாக அவதானித்து ஆதார பூர்வமாக சொல்லப்பட்ட விடயங்களே இவை.

இவற்றை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன். அவ்வாறு நீங்கள் மறுத்தால் உலமாக்களும் சமூகத் தலைவர்களும் கொண்ட ஒரு சபையில் உங்களோடு பகிரங்கமாகப் பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

எனவே இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஒரு முற்போக்கு அரசியல் மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலும் ஏற்படுத்தப்பட வேண்டிய ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கு உங்களைப் போன்றவர்கள் இனிமேலும் தடையாக இருக்கக் கூடாது என்பதனை அல்லாஹ்வின் பெரால் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறேன்

இவ்வண்ணம்

அப்துல் வஹாப்

Advertisements

Comments

  1. RISVI says:

    ITHU KADITHAM ILLA AVARIN PORAAMAIN VEALIPPAADU THAN ITHU

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: