Advertisements

கலாநிதி தயான் ஜயதிலகவுக்கு ஒரு பாராட்டுக் கடிதம்

dayan-jayatilakeஅன்பான கலாநிதி தயான் ஜயதிலக அவர்களுக்கு,

நீங்கள் இதை வாசிப்பீர்கள் என்கிற நம்பிக்கையில் இதை அவர்களது இணையத் தளத்தில் பிரசுரிக்கும்படி நான் கொழும்பு ரெலிகிராப்ட்டிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். அதற்கான காரணம் உங்களது தற்போதைய விலாசத்தை என்னால் பெறமுடியவில்லை, மேலும் இந்த நாட்களில் நீங்கள் அதில் தங்கியிருப்பீர்கள் என்று எனக்கு நிச்சயமும் இல்லை.

கலாநிதி தயான் ஜயதிலக நீங்கள் மிகவும் உயர்ந்தவர். உண்மையில் “ நான் இந்தக் கடிதத்தை எழுதுவது உங்களது உயர்ந்த சேவைக்கு பாராட்டு தெரிவிப்பதற்காகவே ……” என்றுதான் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஆரம்பித்திருந்தால் அந்தக் கடிதம் ஒரு முகாமைத்துவ பணிப்பாளரின் தனிச் செயலாளர் அல்லது தலைமை நிறைவேற்று அதிகாரியினால் வரைவு செய்யப்பட்டதைப் போலிருந்திருக்கும் மற்றும் நான் ஒரு செயலாளர் இல்லை.

இந்தக் கடிதத்தை நான் ஏன் எழுதுகிறேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் ஆண்களுக்கான கழிவறை ஒன்றை பயன்படுத்தியபோது, தேர்தல் தினத்தன்று நீங்கள் எழுதிய கட்டுரை ஒன்றைப்பற்றி இரண்டு கனவான்கள் விவாதிப்பதைக் கேட்க நேர்ந்தது (என்னை நம்புங்கள்! உண்மையில் மக்கள் உங்கள் கட்டுரைகளைப்பற்றி கழிவறைகளில்கூட விவாதிக்கிறார்கள்).

உங்கள் கட்டுரையின் உள்ளடக்கம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது ஆனால் அது மிகவும் சக்தி வாய்ந்தது என்பது எனக்கு நிச்சயம், அந்தக் கனவான்களில் ஒருவர்  நீpங்கள் ஒரு அரசியல் விஞ்ஞானி மட்டுமல்ல கிட்டத்தட்ட தங்களுக்கு பணம் கொடுப்பவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்கான பணியினைச் செய்யும் ஒரு அரசியல் ஆடை அவிழ்ப்பாளரைப் போன்றவர் என்று உங்களைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்தக் கட்டத்தில் குறுக்கிட்டு அவர்களிடத்தில் உங்களைப்பற்றி நம்பிக்கையூட்டி நீங்கள் அளவுகோல்கள் மூலம் அளவிடமுடியாத ஒரு அறிவாளி என்று வாதிட எண்ணினேன். நான் எனது காற்சட்டையை சரி செய்து கொண்டு வெளியில் வந்தபோது எனக்கு பெரிய ஏமாற்றம் அளிக்கும் வகையில் அவர்கள் இருவரும் அங்கிருநது சென்றிருந்தார்கள்.

அந்தக் கணத்தில்தான் உங்கள் கருத்துக்களோடு எனக்கிருந்த ஐக்கியத்தை வெளிப்படுத்தும் விதமாக உங்களைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று நான் தீர்மானித்தேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது நீங்கள் ஒரு அரசியல் ஆடை அவிழ்ப்பாளர் என்கிற கருத்தை ஒரு உண்மையான ஸ்ரீலங்காவாசி நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டான், ஏனென்றால் எனது வாழ்க்கையில் அநேக ஆடை அவிழ்ப்பாளர்களை நான் பார்த்த ஹாலிவுட் படங்கள் மற்றும் நான் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த புனிதமற்ற காணொளிகள் ஆகியவற்றில் பார்த்திருக்கிறேன் மற்றும் அவை எதுவும் உங்களைப் போல இல்லை. நான் நினைக்கிறேன், நீங்கள் ஒரு அரசியல் ஆடை அவிழ்ப்பாளர் அல்ல உண்மையில் ஒரு அரசியல் விஞ்ஞ}னிதான் என்று உலகத்துக்கு நிரூபிக்க இந்த ஒரு கருத்தே போதும்.

இந்த உலகம் அல்லது ஒருவேளை கொழும்பு டெலிகிராப் வாசகர்கள் நீங்கள் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான ஒருவராக இருக்கவேண்டும் என்று ஏன் விரும்புகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒவ்வொருவருக்கும் தாங்கள் விரும்பும் எவருக்கும் ஆதரவு தெரிவிப்பதற்கு உரிமை உண்டு அது ஒரு நியாயப்படுத்தலின் அடிப்படையில்தான் இருக்கவேண்டும் என்கிற தேவை இல்லை. உதாரணத்துக்கு சுமனா கோமசின் தீவிர ரசிகர் ஒருவரிடம் ஏன் அவர், அவள்மீது இத்தனை வெறி கொண்டிருக்கிறார் என்று யாராவது கேட்பார்களா? இல்லை. ஒருவேளை அந்த உணர்ச்சிகரமான பிணைப்பு நியாயப்படுத்தலுக்கு அப்பாற்பட்டது அல்லது நாகரிகமடைந்த சமூகத்தவர்களாகிய நாங்கள் எந்தவித பகுத்தறிவுமின்றி தெரிவு செய்யும் அவரது உரிமையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

உங்கள் விடயமும் அதேமாதிரியான ஒன்றுதான். நான் மகிந்த ராஜபக்ஸவை ஆதரிக்கிறேன் ஏனென்றால் அவரது தோற்றம் மகிழ்ச்சியின் ஆழ்ந்த வெளிப்பாட்டைக் காண்பிக்கிறது, மற்றும் எனக்கு மைத்திரிபால சிறிசேன ஒரு பாடசாலை அதிபரைப் போலவே தோற்றமளிக்கிறார், மானிய விலையில் ஒரு உந்துருளியை வழங்கும் தேசியத் தலைவரைப்போல அல்ல. மக்கள் தொடர்ச்சியாக உங்கள்மீது தாக்குதல் தொடுப்பதற்கான காரணம் அறிவாளிகள் தங்கள் முடிவுகளை தர்மத்தின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைப்பதினால்தான். நல்லது, அது அறிவாளிகளுக்கு உரியது. நான் கருதுவது என்னவென்றால் இந்த முறை நீங்கள தயான் ஜயதிலகவாகவே நடந்து கொண்டுள்ளீர்கள், அரசியல் விஞ்ஞானியான கலாநிதி தயான் ஜயதிலகவை போல அல்ல.

ஸ்ரீலங்காவின் ஒரு சாதாரண மனிதன் என்கிற வகையில் நான் உறுதியாக நம்புவது, உங்களை ஒரு பாசாங்குக்காரன் என அழைக்கும் தார்மீக உரிமை யாருக்கும் கிடையாது என்றே. எனது வாதத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பரிசுத்த சுவிசேத்தில் இருந்து ஒரு உதாரணத்தை (ஜோண் 8:1 – 11 ) இங்கு குறிப்பிட விரும்புகிறேன். விபச்சாரக் குற்றத்தில் அகப்பட்ட பெண் ஒருத்தியை யேசுவின் முன் கொண்டுவந்தார்கள். அவள் செய்த பாவத்திற்குத் தண்டனையாக அந்தப் பெண்ணை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று அங்கிருந்த மக்கள் கூட்டம் விரும்பியது. யேசு அந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது ஒருபோதும் பாவம் செய்திராதவர்கள் மாத்திரம் அந்தப் பெண்மீது கல்லெறியலாம் என்று. அந்தப் பெண்மீது கல் வீசுவதற்கு அப்படியான ஒரு மனிதன் அங்கிருக்கவில்லை.

அன்பான தயான் ஜயதிலக, நீங்களும்கூட அந்த சமூகத்தில்தான் வாழ்கிறீர்கள் உங்களை விமர்சிக்கும் எவரும் தூய்மையானவர்கள் இல்லை. அவர்கள் சகலவிதமான பாவங்களையும் செய்கிறார்கள். அவர்கள் மதுபானம் அருந்துகிறார்கள், புகை பிடிக்கிறார்கள், பொய் சொல்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள் எல்லாவற்றுக்கும் மேலாக தடை செய்யப்பட்ட படமான “பறக்கும் மீனை” யு – ரியுப்பில் பார்க்கிறார்கள், மற்றும் இந்த மனிதர்கள்தான் அரசியல் கருத்துக்களத்தில் உங்களைப் பற்றிக் கருத்து தெரிவிக்கிறார்கள் அவற்றில் பெரும்பாலானவை நடுவர்களால் தணிக்கை செய்யப் பட்டுவிடுகிறது.

எங்கள் தாய்த் திருநாட்டை திருமதி பிள்ளை அம்மையார் போன்ற தீய சக்திகளுடன் வீரமுடன் போராடிக்  காப்பாற்றி, நாட்டைப் பாதுகாப்பதற்கு கடவுளால் அனுப்பப்பட்ட மீட்பர் என்றே நான் உங்களைக் கருதுகிறேன். ஆனால் நாடு உங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. நீங்கள் காப்பாற்றுவதற்காக போராடிய அதே நாடு, உங்களை இராஜதந்திரி பதவியில் இருந்து அகற்றியது. அது மிகப்பெரும் தவறு என்று அனைவரும் உணருவதற்குள் காலம் கடந்துவிட்டது, அதன்பின் ஜெனிவாவில் நடந்த ஒவ்வொரு யுத்தத்திலும் நாங்கள் தோல்வியடைய ஆரம்பித்தோம்.

தார்மீக உயர் தளத்தில் உள்ள உங்களது கோட்பாடுதான் பொதுமக்கள் இழப்பு எதுவுமின்றி எவ்வாறு நாங்கள் இந்த உயரிய மனிதாபிமான நடவடிக்கையை வெற்றி கொண்டோம் என்பதை சம்மதிக்க வைக்கும் ஒரே ஒரு மாதிரி விளக்கமாக அமைகிறது. உங்கள் கோட்பாட்டின்படி விளங்கிக் கொள்ள முடிவது எங்களது வீரமிக்க வீரர்கள் ஒரு கையில் ரி – 56 துப்பாக்கியையும் மறுகையில் “ 30 நாட்களில் சர்வதேச மனித உரிமைகளை கற்றுக் கொள்வது” என்கிற புத்தகத்தையும் ஏந்திக்கொண்டுதான் யுத்தத்துக்கு சென்றார்கள் என்பதை.

 எதிரிகளின் நிலையை நோக்கி அவர்கள் ஒரு ஒற்றை ரவையைக் கூடச் சுடவில்லை. எல்.ரீ.ரீ.ஈ அவர்களை நோக்கிச் சுட்டபோது அவர்கள் சர்வதேச மனித உரிமைகள் பற்றிய விதிகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள். இது எங்கள் வீரர்கள் தார்மீக உயர் நிலையை எட்டுவதற்கு வழிவகுத்தது, மற்றும் இதன் காரணமாக கொடிய எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் அதீத குற்ற உணர்வுக்கு ஆட்படத் தொடங்கி அவர்களின் தலைவர்கள் அவர்களுக்கு வழங்கியிருந்த சயனைட் வில்லைகளை உட்கொண்டார்கள்.

இதை மே,2009ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமர்வுகளில் உலகத்துக்கு விளக்கியிருந்தீர்கள் மற்றும் இதன் விளைவாக மேற்கத்திய வல்லரசு சக்திகளால் எங்கள் தாய் நாட்டுக்கு எதிரான பிரேரணைகளை சமர்ப்பிக்க முடியவில்லை. நீங்கள் மேலும் உலகத்துக்கு நிரூபித்தது இந்த உயரிய மனிதாபிமான நடவடிக்கையில் பொதுமக்கள் மரணம் சம்பவித்தது, வன்னியில் உள்ள மக்கள் பயன்படுத்திய மேனியழகை சிவப்பாக்கும் கிரீமின் ஒவ்வாமை காரணமாகவே அல்லாது இராணுவ நடவடிக்கையால் அல்ல என்று.

மனி உரிமைகள் ஆர்வலர்கள் என அழைக்கப்படுபவர்கள் முன்வைத்த 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்கிற கோரிக்கையை எதிர்ப்பதற்காக நீங்கள் பயன்படுத்திய மற்றொரு கோட்பாடு கணிச நிலை கருத்து சம்பந்தமானது. இதைப்பற்றி உங்கள் சக இராஜதந்திரிகள் சொல்வது, நீங்கள் இதை நிதி நிலை கணக்காய்வு கொள்கைகளில் இருந்து எடுத்துள்ளீர்கள் என்று. கணிச நிலைக் கருத்து, கணக்குப் புத்தகங்களில் ஒரு குறிப்பிட்டளவு வரைமுறைக்கு தவறுகளை அனுமதிக்கிறது. பொதுவாக வரி செலுத்துவதற்கு முன்பாக மொத்த வருவாய் தொகையில் 5 விகிதத்துக்கும் குறைவான லாபத்தொகையை நிதி நிலை கணக்காய்வாளர்கள் முக்கியமற்றதாகக் கருதி விட்டுவிடுவார்கள்.

உலகத்தில் ஒரு வருடத்தில் நடக்கும் சராசரி மரணத்தின் அளவு 56.6 மில்லியன் ஆகும். மனித உரிமைகள் ஆர்வலர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு நீங்கள் நிரூபித்துக் காட்டியது, 40,000 மக்கள் கொல்லப்பட்டார்கள் ( ஒரு வருடத்தில் நடைபெறும் மரணங்களில் 0.00007 விகிதம்) என்று ஐநா தரும் மதிப்பீடு முக்கியமற்றது மட்டுமன்றி முற்றாகத் தவிர்க்கப்படத் தக்கதும் என்று. சமகால அரசியல் விஞ்ஞான மாணவர்கள் இந்த வாதம்தான் மேற்குலகு மற்று நவ சி|யோனிச சக்திகளை மந்திரத்தால் கட்டுண்டவர்களைப் போல வாயடைக்க வைத்தது. இதே சக்திகள்தான் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த உங்களை அந்தப் பதவியில் இருந்து அகற்றச் சதித் திட்டம் தீட்டின.

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமற் போகிறார்கள். அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் பற்றி ஆய்வு செய்வோரின் அறிக்கைகள் இந்த ஆட்களில் பெரும்பாலானவர்கள் வேற்றுக்கிரகத்தைச் சேர்ந்தவர்கள் எனப்படும் ஏலியன்களால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. அமெரிக்க அரசாங்கம் இந்த அறிவிப்பை அப்பட்டமாக நிராகரிக்கிறது மற்றும் இந்த வேற்றுக் கிரகத்தவர்களுக்கு எதிராக எதுவித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. அமெரிக்காவில் வேற்றுக் கிரகத்தவர்கள் முழுதான  தண்டனை விலக்குடன் செயற்படுகிறார்கள்.

ஸ்ரீலங்காவிலும் இதே ஏலியன்கள் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களை அடையாளம் தெரியாத நான்கு சக்கர வெள்ளை நிற பொருட்களில் (சிலர் இதனை வெள்ளை வான் என அழைக்கிறார்கள்) கடத்துகிறாhகள் மற்றும் பாசாங்குக் காரர்களான அமெரிக்கா மற்றும் நவ சியோனிஸ்ட்டுக்களுடன் சேர்ந்த நவ பிரிவினைவாதிகளான தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் இந்த காணாமற் போதல்களுக்கு ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர்மீது பழி சுமத்துகிறார்கள். அமெரிக்கா மற்றும் இஸ்ராயேல் ஆகிய இரு தரப்பினரதும் இத்தகைய சேறு பூசும் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு, எங்களது வீரமான ஆயுதப் படைகள்மீது அவர்கள் எப்போதும் கொண்டுள்ள பொறாமை மற்றும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஜிகாதிகளை அவர்களால் தோற்கடிக்க முடியாமல் உள்ள இயலாமையுமே காரணம்.

எங்கள் தாய்நாட்டின் மீதும் மற்றும் முந்தைய ராஜபக்ஸ அரசாங்கத்தின் மீதும் சுமத்தப்பட்டுள்ள மற்றொரு குற்றச்சாட்டு, மே 2009ல் வன்னியில் உள்ள தமிழர்கள் பேரூந்துகளில் கட்டாயப்படுத்தி ஏற்றிச்செல்லப்பட்டு முட்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்;, இது அரசியலமைப்பில் உறுதிப் படுத்தப்பட்டுள்ள  சுதந்திரமான நடமாட்டத்தை மறுக்கும் செய்கை என்று. இது ஒரு தீவிரமான குற்றச்சாட்டு, ஆயினும் இதற்கு எதிராக உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நீங்கள் போராடினீர்கள். இந்த தடுப்புக் காவல் முகாம்கள் என்று சொல்லப்படுபவவை யாவும் உண்மையில் நலன்புரி நிலையங்கள் இங்கு வறியவர்களான அதிகம் சுத்கரிக்கப்படாத தமிழர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்படுவதுடன் மற்றும் இந்த மேனியழகை சிவப்பாக்கும் கிறீமை எவ்வாறு அவர்களின் முகத்தில் பூசுவது என்றும் போதிக்கப் படுகிறது எனவே அவர்கள் ஸ்ரீலங்காவின் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களைப் போல பார்ப்பதற்கு அழகாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்று கூறி சர்வதேச சமூகத்தை இணங்க வைத்தீர்கள்.

நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு, ஏன் மேற்கு மற்றும் ஐநா மனித உரிமைகள் சபை போன்றவை தமிழர்கள் மற்றும் வடமாகாணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெருமளவு அலட்டிக் கொள்கின்றன என்பது புரியவில்லை. ஸ்ரீலங்கா அரசாங்கம் இளைஞர்களுக்கு தொண்டர் ஆசிரியர் பதவிகள் மற்றும் சிகப்பழகு கிறீம் வாங்குவதற்கு தேவையான  போதியளவு சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்கியுள்ளது. இப்போது அவர்களுக்கு யாழ்தேவியும் கிடைத்துள்ளது எனவே நாட்டின் இதர பகுதிகளுக்கு அவர்கள் உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளலாம். வடக்கிலுள்ள தமிழர்கள் அளவுக்கு மீறிய மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள், ஆனால் இந்த நவீன முதலாளித்துவாதிகளான மேற்கு  அவர்களை மகிழ்ச்சியற்றவர்களாக சித்தரிப்பதுடன் முதலாளித்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு புதிய உலக வரிசையை உருவாக்கவும் முயல்கிறது.

தற்சமயம் மனித உரிமைகள் அமைப்புகள் என அழைக்கப் படுபவவைகளால் நாடு பாரிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. யாராவது கட்டிட வேலை செய்வதற்காக நிலத்தை தோண்டும்போது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், இத்தகைய அரசு சாரா நிறுவனங்கள் கூச்சல்போட ஆரம்பிக்கின்றன. மனித எச்சங்கள் காணப்படுவது ஒரு சாதாரண நிகழ்வு கடந்த காலங்களில் பிரான்ஸ், இத்தாலி, மற்றும் ரஷ்யா போன்ற இடங்களிலும் இப்படியான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. மேற்கு அந்;த எலும்புக்கூடுகள் ஆதிகால மனிதர்கள், மனித பரம்பரையின் அழிந்துவிட்ட இனங்கள் மற்றும் நவீன மனிதர்களுடன் தொடர்புடைய உயர் விலங்கினங்களின் எச்சங்கள் என்று சொல்கிறது. எனினும் அதே மேற்கு ஸ்ரீலங்காவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் யுத்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுடையது என்று சொல்கிறது.
இப்போது நாங்கள் யுத்தத்தின் பின்னர் இத்தகைய திரளான மனித புதைகுழிகளை மன்னார் மற்றும் மாத்தளை ஆகிய இடங்களில் கண்டு பிடித்துள்ளோம். அநேகமாக இந்த மன்னார் புதை குழிகள் ராமாயண காலத்தில் இந்திய அரசரான ராமருக்கும் மற்றும் ஸ்ரீலங்கா அரசனான ராவணனுக்கும் இடையில் கொல்லப் பட்டவர்களை புதைத்த இடமாக இருக்க வேண்டும். இதை நான் மிகவும் பொறுப்புடன் கூற முடியும், ஏனெனில் இந்த பகுதியில் வாழும் தமிழர்கள் மரணமடைந்த தங்களவர்களின் உடல்களை திருக்கேதீஸ்வரம் கோவில் உள்ள சுற்றாடலில் ஒருபோதும் புதைக்க மாட்டார்கள். இந்தக் கோவில் கிட்டத்தட்ட கி.மு 600 களில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன்படி தர்க்க ரீதியாக எங்களால் சொல்லக்கூடியது அங்கு புதைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அங்கு கி.மு 600 களுக்கு முன்பு அங்கு புதைக்கப் பட்டிருக்க வேண்டும்.

அன்பான கலாநிதி. தயான் ஜயதிலக அவர்களே இங்குதான் நாட்டிற்கு நீங்கள் அவசியப் படுகிறீர்கள். எங்களுக்கு உங்களது புத்திசாலித்தனம் தேவை. எங்களுக்கு உங்களது ஆங்கில சொல்வன்மை தேவையாக உள்ளது, தற்பொழுது ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு தூதரகங்களில் உள்ள ராஜதந்திரிகளிடம் அது பற்றாக்குறையாக உள்ளது. நாட்டின் தேசப்பற்றுள்ள சக்திகளாகிய நாங்கள் உங்களுடன் உள்ளோம் மற்றும் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். இப்போது மக்கள் உங்களைப்பற்றி சொல்வதைப்பற்றி எல்லாம் ஒருபோதும் கவலைப் படாதீர்கள், ஏனெனில் எதிர்கால சந்ததி இப்படித்தான் சொல்லும், விஞ்ஞ}னியான கலிலேயோ கலெயிலி மற்றும் அரசியல் விஞ்ஞானியான கலாநிதி. தயான் ஜயதிலக ஆகியோர் அவர்களது விமர்சகர்களால் இழிவு படுத்தப்பட்டார்கள், ஆனால் வரலாறு அவர்களைப் போற்றியது என்று.

மனப்பூர்வமான மதிப்புகளுடன்
வி.கந்தையா

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Courtesy: தேனீ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: