Advertisements

ஊழல் பேர்வழிகள், வெள்ளை வான்காரர்கள் தண்டிக்கப்படுவார்களா?

எம்.எஸ்.எம். ஐயூப்

கடந்த 9ஆம் திகதி பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்ததைப் போல், இதற்கு முன்னர் பதவிக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதியோ எந்தவொரு அரசாங்கமோ குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட விடயங்களை செய்வேன் என்று நாட்குறிப்பொன்றை முன்வைத்ததில்லை.

தமது அரசாங்கம், அடிப்படையில் 100 நாட்களுக்கான அரசாங்கம் என்பதால் தான், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட விடயங்களை செய்வேன் என்று அவரால் கூற முடிந்தது. ஐந்தாண்டுகளுக்கான அல்லது ஆறாண்டுகளுக்கான அரசாங்கமொன்று இது போன்ற நாட்குறிப்பொன்றை முன்வைக்க முடியாது.

அதேவேளை, அந்த 100 நாள் வேலைதிட்டத்தில் நாட்களை குறிப்பிடாமல் 100 வாக்குறுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

போரின் போது விதவைகளானவர்களையும் அவர்களின் பொறுப்பில் வாழ்பவர்களையும் பாதுகாக்க விசேட திட்டமொன்றை முன்வைத்தல், தோட்டப்புற மக்களுக்காக லயன்களுக்கு பதிலாக வீடமைப்புத் திட்டமொன்றை அமுலாக்குதல், தோட்டப்புற பிள்ளைகள் விஞ்ஞானத்துறையில் உயர்தரம் வரை கல்வி கற்கும் வகையில் வசதிகளுள்ள பாடசாலைகளை ஆரம்பித்தல் ஆகியன அந்த வாக்குறுதிகளுள் சிலவாகும்.

இவற்றை நிறைவேற்ற நாட்களை குறிப்பிடாததால், அரசாங்கம் அவற்றை நிறைவேற்றியதா இல்லையா என்பதை அரசாங்கம் குறிப்பிட்டுள்ள 100 நாட்கள் கடந்த பின்னர் தான் அறிந்து கொள்ள முடியும்.

அந்த 100 வாக்குறுதிகளில் எரிபொருள் விலை குறைத்தல் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடியியல் உரிமைகளை வழங்குதல் ஆகிய வாக்குறுதிகள் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டன. ஏனைய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

நாட்களை குறிப்பிட்டு அரசாங்கம் நிறைவேற்றவிருக்கும் பணிகளுள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழும் இடம்பெற்ற மாபெரும் ஊழல்களைப் பற்றியும் வெள்ளை வான்களில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களைப் பற்றியும் விசாரணை நடத்தி சம்பந்தப்பபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதும் அடங்கும். ஆனால், அந்தப் பணியை புதிய அரசாங்கம் நிறைவேற்றுமா என்ற சந்தேகம் மக்களிடையே படிப்படியாக உருவாக ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் ஊழலைப் பற்றி பெயர் பெற்ற சிலர் வெளிநாடு சென்றமை இந்த சந்தேகத்துக்கு பிரதான காரணமாகும். அவர்களை பிடித்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததைப் போலவே, அவர்களைப் போன்ற பலர் இப்போதும் தப்பிச் செல்ல எந்தவித தடையும் இருப்பதாக தெரியவில்லை.

கடந்த காலத்தில் பல கோடிக் கணக்கிலான ஊழல்களைப் பற்றிக் குறிப்பிடும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்படுவது வழக்கம். அமெரிக்கப் பிரஜையான அவர், தேர்தல் முடிவடைந்தவுடன் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் திறைசேறியின் முன்னாள் செயலாளருமான கலாநிதி பி.பீ.ஜயசுந்தரவும் அவ்வாறே ஊழல்களைப் பற்றிக் குறிப்பிடப்படும் போது பலரால் நினைவுகூறப்படும் ஒருவர். அவரும் தேர்தல் முடிவடைந்தவுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பசில் ராஜபக்ஷவுக்கு நாட்டை விட்டு வெளியேற இடமளித்ததற்காக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் குறை கூறியிருந்தார். பசில் ராஜபக்ஷவைப் பற்றிய அவரது கருத்தை இதுவரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எந்தவொரு தலைவரும் விமர்சிக்கவில்லை. பஸில் ராஜபக்ஷ நியாயமான காரணமொன்றுக்காகவே வெளிநாடு சென்றார் என அக்கட்சியின் எந்தவொரு தலைவரும் கூறவில்லை.

அதாவது, பசில் ராஜபக்ஷவின் வெளியேறல் சந்தேகத்திற்கிடமானது என்பதை அவரது கட்சிக்காரர்களே ஏற்றுக்கொள்கிறார்கள் போலும்.

பசில் ராஜபக்ஷ எதற்காக வெளிநாடு சென்றார் என்பது இன்னமும் நாட்டில் எவருக்கும் தெரியாது. புதிய அரசாங்கத்தின் தலைவர்கள், தேர்தல் காலத்தில் ஐ.ம.சு.கூ அரசாங்கத்தின் ஊழல்களைப் பற்றி வெகுவாக பேசியிருப்பதனாலும் பசில் ராஜபக்ஷ நாட்டுப் பொருளாதாரத்தின் மிகப்பெரும் பகுதியை தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்மையினாலும் அவர் தேர்தல் முடிவடைந்தவுடன் திடீரென நாட்டை விட்டு வெளியேறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவது நியாயமே.

இந்த சந்தேகத்தை அவர் வெளிநாடு சென்ற நாள் முதல் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், முன்னாள் ஜனாதிபதி உட்பட அவரது சகோதரர் ஒருவராவது பசில் வெளிநாடு சென்ற காரணத்தைக் கூறி அந்த சந்தேகத்தை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அது மக்களின் சந்தேகத்தை வலுப்பேறச் செய்கிறது.

பசில் ராஜபக்ஷ மட்டுமல்ல ஐ.ம.சு.கூ. அரசாங்கத்தில் இருந்து ஊழல் மற்றும் வெள்ளை வான்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் எவரும் இப்போது வேண்டுமானாலும் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முடியும். அதனை தடுக்க புதிய அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

இதுவரை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சின் மேற்பார்வை உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தனவினதும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலினதும் கடவுச் சீட்டுகளை மட்டும் பறிமுதல் செய்யுமாறு இலஞ்சம், ஊழல் விசாரணைக்கான ஆணைக்குழ பணிப்புரை விடுத்துள்ளது.

இவ்வாறு ஊழல் பேர்வழிகள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதும் தப்பிச் செல்ல முயற்சிப்பதும் நடக்க முடியாத காரியம் அல்ல. இது புதிய அரசாங்கத்தின் தலைவர்கள் எதிர்பாராத விடயமும் அல்ல. 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றி பெற்றவுடன் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதை தடுப்பதற்காக 9ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடிவிடுவதாக தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

உண்மையிலேயே விமான நிலையத்தை முடிவிட அவர் நினைக்கவில்லை என்றே ஊகிக்க முடியும். ஊழல்களில் ஈடுபட்டவர்களை நாட்டை விட்டு தப்பிச் செல்ல இடமளிக்கப் போவதில்லை என்பதையே அவர் இதன் மூலம் கூறியிருக்க வேண்டும்.

புதிய அரசாங்கத்தின் தலைவர்கள் அவ்வாறு கூறிய போதிலும், ஊழல்களில் ஈடுபட்டவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்த போதிலும் இப்போதும் எவரும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியும். தாம் இன்னமும் எதிர்க் கட்சியில் இருப்பதாக நினைத்துக்கொண்டு புதிய ஆளும் கட்சியினரும் பழைய அரசாங்கத்தின் ஊழலகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கொன்றில் 800 கோடி ரூபாய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அப்பணத்தை தாம் திறைசேரிக்கு அனுப்பி வைத்ததாகவும் புதிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த வாரம் கூறியிருந்தார்.

இந்தப் பணம் கோட்டாபய ராஜபக்ஷவுடையது என்றும்; அப்பணம் அமைச்சர் சூட்சுமமாக கூற முற்படுவதைப் போல் ஊழல் மூலமாக சம்பாதிக்கப்படடது என்றும் சந்தேகிக்கக் காரணம் இருந்தால் அமைச்சர் முதலாவதாக செய்ய வேண்டியது அதனை ஊடகங்களுக்கு கூறுவது அல்ல, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை இரகசியப் பொலிஸார் மூலம் விசாரணைக்குட்படுத்துவதே.

மறுபுறத்தில் அப்பணம் தம்முடையது அல்ல, பாதுகாப்பு அமைச்சினுடையது என்றும் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தை இடமாற்றுவதற்கான பணமே அது என்றும் கோட்டாபய ராஜபக்ஷ கூறிய போது அமைச்சர் கருணாநாயக்க அதனை மறுக்கவும் இல்லை.

இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் கோட்டாபய ராஜபக்ஷ தூய்மையானவர் என்றோ அல்லது அவர் ஊழல் எதிலும் ஈடுபடக்கூடியவர் அல்ல என்றோ கூற நாம் முற்படவில்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் செயற்பட்ட விதத்தைப் பார்த்தால் அந்த அரசாங்கத்தில் எவரைப் பற்றியும் அவ்வாறான சான்றிதல்களை வழங்க முடியாது.
குறிப்பாக கோட்டாபயவின் அமைச்சின் கீழ் பொர் காலத்தில்; கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் கீழியங்கும் ரக்ன லங்கா பாதுகாப்புச் சேவையின் பொறுப்பில் இருந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முறையைப் பற்றி இப்போது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெள்ளை வான்கள் சம்பந்தமாகவும் பலர் கோட்டாவையே குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே எவரும் தூய்மையானவர் என்று கூற முடியாது.

ஆனால், அமைச்சர்களும் புதிய அரசாங்கத்தின் உறுப்பினர்களும் முன்னாள் அரசாங்கத்தின் ஊழல்களைப் பற்றி பேசிக்கொண்டிராது குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள இடமளிக்க் கூடாது என்பதையே இங்கு வலியுறுத்துகிறோம்.

அரசாங்கததின் தலைவர்கள் இங்கே ஒரு முக்கிய வாதத்தை முன்வைக்கிறார்கள். ஊழல்களில் ஈடுபட்டோர்களை கண்டபடி கைது செய்ய முடியாது, அதற்கான சட்ட விதி முறைகளை பின்பற்ற வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள்.

பொலிஸார் ஒருவரை கைது செய்வதாக இருந்தால் அதற்காக ஒரு முறைப்பாடு இருக்க வேண்டும், முறைப்பாடு செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இருக்க வேண்டும், முறைப்பாடுகள் இருந்தாலும் அவற்றின் உண்மைத்தன்மையைப் பற்றி பொலிஸாரோ அல்லது லஞ்சம், ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளோ திருப்தியடைய வேண்டும். அதற்கும் காலம் வேண்டும் என்றெல்லாம் அவர்கள் வாதிடுகிறார்கள்.

இது உண்மை தான். கடந்த காலங்களில் எவர் மீது அரச தலைவர்களோ அல்லது பொலிஸாரோ சந்தேகங் கொண்டார்களோ அல்லது எவர் மீது அரச தலைவர்கள் வெறுப்பு கொண்டார்களோ அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது ஏதாவது வழக்கு தாக்கள் செய்யப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டம் அனேகமாக அதற்காக பாவிக்கப்பட்டது. அதனையே புதிய ஆட்சியாளர்களும் செய்வதாக இருந்தால் அவர்கள் வாக்குறுதியளித்த நல்லாட்சி என்பது வெறும் கனவாகும். எனவே ஒருவர் குற்றவாளி என்பதை ஊகிக்க முடிந்தாலும் முறையாக நடைமுறைகளை பின்பற்றியே அவரை கைது செய்ய வேண்டும்.

ஆனால், ஊழல்களில் ஈடுபட்டதாக தேர்தல் காலத்தில் எதிர்க் கட்சியினரால் குற்றஞ்சாட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச போன்றோர்கள் இன்னமும் சுதந்திரமாக இருக்கிறார்கள்.
அவர்கள் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தும் இன்னமும் அவர்களிடம் குறைந்தபட்சம் ஒரு வாக்குமுலமாவது பெறப்படவில்லை. வேண்டும் என்றால் அவர்கள் இலகுவாகவே நாட்டை விட்டுத் தப்பிச் செல்லலாம்.

ஊழல்கள் தொடர்பான ஆவணங்களை அழிக்கலாம். ஏற்கனவே முன்னாள் பிரதமரின் வீட்டுத் தோட்டத்தில் பெருந்தொகை ஆவணங்கள் புதைக்க தயாராக வைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊழல், வெள்ளை வான்கள் ஆகியவை தொடர்பாக முன்னாள் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் எவரும் கைது செய்யப்படுவார்களா என்று சந்தேகிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக ஊழல்கள் மற்றும் குற்றச் செயல்களைப் பற்றி ஒரு கட்சி எதிர்க் கட்சியில் இருக்கும் போது எவ்வளவு தான் கூச்சலிட்டாலும் அதே கட்சி தேர்தலொன்றில் பதவிக்கு வந்தால் பழைய தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை.

நாடு சுதந்திரம் அடைந்ததன்பின்னர் கடந்த 46 வருடங்களில் ஒரே ஒரு முறை தான் பழைய தலைவர் ஒருவர் தண்டிக்கபடப்டு இருக்கிறார். 1972ஆம் ஆண்டு காணி சீர்த்திருத்தத்தின் போது அப்போதைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க ஊழல்களில் ஈடுபட்டார் என்று குற்றச்சாட்டி 1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசாங்கம், விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்து 1980ஆம் ஆண்டு ஏழு ஆண்டுகளுக்கு அவரது குடியியல் உரிமைகளை ரத்துச் செய்தது. அதைத் தவிர முன்னாள் தலைவர்கள் தண்டிக்கப்பட்ட சம்பவங்கள் இல்லை.

இரண்டாவதாக, இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கிறார். அவரது கட்சியின் போஷகராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

குற்றச்சாட்ப்பட்ட பலர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள். எனவே தான் மக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் தண்டிக்கப்படுவார்களா என்று சந்தேகப் படுவதில் நியாயம் இருக்கறது. ஆனால் ஊழல் பேர்வழிகளையும் வெள்ளை வான் காரர்களையும் தண்டிக்க வேண்டும் என்றே மக்கள் புதிய ஆட்சியாளர்களுக்கு வாக்களித்தார்கள்.         

Courtesy: Tamil mirror

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: