Advertisements

கிழக்கு மாகாண சபை: சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்

-எம்.பௌசர்-

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடு இலங்கை மைய அரசியலில்  ஏற்படுத்திய தாக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இரு இனங்களுக்கிடையேயும் பல்வேறு முரண்பாடுகளும் கசப்பணர்வுகளும் இருந்தாலும், தம்மை அடக்குகின்ற ஒரு பொது எதிரிக்கு எதிராக ஒரு தீர்க்கமான அரசியல் நிலைப்பாட்டினை தமிழ், முஸ்லிம் மக்கள் எடுத்து, நடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு வேலைத்திட்டமாக இல்லாது விட்டாலும் தனித் தனியே  செயற்பட்டனர்.

இதில் முதலாவதாக தம்மை ஒடுக்குகின்ற பிரதான பொது எதிரி  சிங்கள  இன மேலாதிக்க ஆளும் குழுமம் என்பது மிக வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாக இருந்தது. அந்த சிங்கள  இன மேலாதிக்க ஆளும் குழுமத்தினை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு இரு இன மக்களின் அபிலாசைகளும் ஒரு மையப் புள்ளியில் இணைந்தன. இந்த இணைவின் விளைவாக ஒரே நேரத்தில் நம்பிக்கையுடன் கூடிய  எதிர்பார்ப்பொன்றும், அதே நேரம் அதிர்ச்சியுடன் கூடிய பிரித்தாளும் சூழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

epc2இந்த நிலைமையினை மதிப்பிடுபவர்களுக்கு பல பார்வைகளும், அந்த பார்வையின் அடியாக அரசியல் நிலைப்பாடுகள் எழுவதும் தவிர்க்க முடியாதவை. தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமையை, இணைந்த வாழ்வை விரும்புவர்களுக்கும், நீண்ட காலமாக இலங்கை அரசியலில் ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மை மக்களுக்கான சமத்துவ அரசியல் வாய்ப்பினைக் கோருபவர்களுக்கும் இதுவொரு நல்ல தொடக்கம் என நம்புவது தவிர்க்க முடியாததாகிறது.

 தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமையை, இணைந்த வாழ்வை விரும்பாத சக்திகள் “பொது அரசியல் அபிலாசைகள் ஒன்றாக சந்திக்கும் புள்ளியை “தகர்க்கவே விரும்புவர். நிச்சயமாக   இலங்கையின் சிங்கள மைய அரசு ஒருபோதுமே இந்த இணைவின் புள்ளி தொடர்வதற்கும், இரு இனங்களுக்கும் இடையே அரசியல், சமூக ஐக்கியம் வளர்வதற்கும் வாய்ப்பளிக்காது என்பது சர்வ நிச்சயம்.

மிக வெளிப்படையாக சொல்லப்போனால், தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகள் இணைந்த பின்புலத்தில் தனது அதிகாரத்தினை பெற்றுக் கொண்ட மைத்திரி, ரணில் கூட்டு அதிகாரத்தினை கைப்பற்றிய பின்னான சூழலில் இதனை அனுமதிக்காது. இலங்கையின் இன முரண்பாட்டின் அரசியலை ஆழ விளங்கிக் கொண்டோருக்கு இது இலகுவில் புரியும் உண்மையாகும். 

அதேபோல் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமையை , இணைந்த வாழ்வை விரும்பாத சக்திகள் தமிழருக்குள்ளும் முஸ்லிம்களுக்கும் இருக்கின்றனர். அவர்களுடன் இரு தரப்பினையும்  சார்ந்த அரசியல் தலைவர்களும் பிரதி நிதிகளும் உள்ளனர். இவர்கள்  மைய அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் போவதற்கும் தமது தனிப்பட்ட  நிலைப்பாடுகளுக்காவும் இந்த இணைவை முரண்பாடாக மாற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 

இதன் முக்கிய ஒரு களமாகவே கிழக்கு மாகாணசபை விவகாரம் சமகாலத்தில் மாறி இருக்கிறது. எந்த இணைவின் மாற்றம் மைய இலங்கை அரசியலில் ஒரு சர்வாதிகார இனவாத அரசாங்கத்தினை   தூக்கியெறிந்ததோ , அதே சூழல் இலங்கை கிழக்கு மாகாணசபை விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முரண்பாட்டினை, அதிகார மோதலை தோற்றுவிக்கும் களமாக விரிகிறது. இது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு ஆபத்தான சூழலை தோற்றுவிப்பதுடன் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமையை நிலை நாட்டுவதற்கான பலத்தினையும் மீண்டும் சிதைத்தழிக்க முற்படுகிறது. 

கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சியமைப்பது? யார் முதலமைச்சர் என்கிற அதிகார மோதல் எழுந்துள்ளது. தமிழர்தான் முதலமைச்சராக வர வேண்டும் என்கிற கோரிக்கையை ஒரு பிரிவினரும், முஸ்லிம்தான் முதலமைச்சராக வர வேண்டும் என்கிற கோரிக்கையில் இன்னொரு பிரிவினரும் தமது அரசியல், அறிக்கைப் போரில் குதித்துள்ளனர். இந்த அரசியல் பிற்போக்குவாதத்திற்கு இனவாதம் ஆகுதியாக வார்க்கப்படுகிறது. முரண்பாடுகள் கூர்மையாக்கப்படுகிறது. நேர்மறையான பார்வைக்குப் பதிலாக எதிர்மறையான பார்வை விதைக்கப்படுகிறது. 

கடந்த ஒரு வாரகாலத்திற்கு மேலாக, இந்த விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் மூன்றுக்கும் மேற்பட்ட சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நாடாத்தியும் அவர்களுக்குள் ஒரு பொது இணக்கத்திற்கு வர முடியவில்லை என சொல்லப்படுகிறது.  இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பல காய் நகர்த்தல்கள் மறைமுகமாக நடந்து வருகிறது. இது தமிழ் முஸ்லிம் மக்களின் ஐக்கிய வாழ்வில் ஆபத்தான ஒரு கட்டத்திற்கு வழி வகுக்கலாம் என நான் அஞ்சுகிறேன். 

இந்த இக்கட்டான சூழ் நிலையில் தமிழ், முஸ்லிம் சிவில் சமூகம் இந்த விவகாரத்தில் பார்வையாளர் என்கிற நிலையத் தாண்டி பங்களிப்பாளர்களாக மாற வேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ளது. சமகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் நோக்கிய அரசியல் அழுத்தம் அவசியமாகிறது.

* இரு கட்சிகளிடையேயும் இதுவரை பேசப்பட்ட விடயங்களை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு முன் பகிரங்கப்படுத்துதல் வேண்டும்.

*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கோரிக்கை, நிலைப்பாடுகள் என்ன என்பதையும், முஸ்லிம் காங்கிரஸ் தனது கோரிக்கை, நிலைப்பாடுகள் என்ன என்பதையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்துதல் வேண்டும்.

* தமிழ் , முஸ்லிம் சிவில் சமூகம் கூட்டாக இணைந்து இந்த விவகாரத்தில் காய்தல் உவத்தலின்றி நடு நிலையாக உடனடித் தலையீடு செய்தல் வேண்டும்.

* அமைக்கப்படுகின்ற இந்த சிவில் சமூக பிரதி நிதிகளை இரு கட்சித் தலைமைகளும் மதிப்பதுடன், தமக்கிடையேயான பேச்சுவார்த்தைகளில் அவர்களின் பங்குபற்றுதலையும்   உறுதிப்படுத்துதல் வேண்டும். 

ஏனெனில் இதன் முக்கியத்துவமானது இரு கட்சிகளுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, முழு தமிழ், முஸ்லிம் மக்களின் இணைந்த வாழ்வுடனும் அரசியல் உரிமை விகாரத்துடனும் எதிர்கால வாழ்வியலுடனும் தொடர்புபட்டது. கிழக்கு மாகாணம் தான் தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான உறவுக்கும்,முரணுக்குமுரிய பூமியாக உள்ளது. ஆகவே அரசியல் தலைமைகளிடம் மட்டுமே மக்களின் வாழ்வை ஒப்படைக்காதீர்கள்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: