Advertisements

முஸ்லிம் காங்கிரஸ்: குலையும் கட்டுக்கோப்பு

-ஷுஹைப்-

ஜனாதிபதித் தேர்தலுக்கான காய்நகர்த்தல்களில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. கடந்த காலங்களில் பாராளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் , ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்கிய அரசியல் வானில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப் போகின்றது என்ற வினா எழுப்பப்பட்டு வருகின்றது.

 மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் மு.கா.தலைமையை சிந்தித்து செயலாற்ற முடியாத அளவுக்கு நெருக்குதலுக்கு தள்ளியுள்ளது.

தேசிய ரீதியான சமூக ஒற்றுமைக் கோட்பாடு சிதைக்கப்பட்டு, பிரதேச ரீதியான அரசியல் பலங்களை தீர்மானிக்கும் மனோபாவம் மு.காவுக்குள் வளர்ந்துள்ளதையே இப்போக்கு காட்டுகின்றது. முஸ்லிம்களின் அரசியல் முகவரியைப் பறைசாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தசாப்த காலத்தில் பாதை மாறி பயணிக்க புறப்பட்டதற்கான காரணங்கள் பல.

தற்போதைய தலைமையை நெருக்குதல், அழுத்தங்களுக்குள் தடுமாற வைக்கும் ஓர் இரண்டாம் மட்ட சக்தி மு.காவுக்குள் வளர்ந்து வருவதையே காணமுடிகின்றது. இதற்கு கட்டியம் கூறுவது போல் மு.கா தலைமையின் அண்மைக்கால தடுமாற்றங்கள் அமைந்துள்ளன. இந்நிலைமை நீண்ட காலமாக நீறு பூத்த நெருப்பு போல் கட்சிக்குள் மறைந்து கிடந்துள்ளது.

கடைசியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் இக்கட்சியின் இரண்டாம் மட்டம் படுத்தும் பாடும் தலைமை படும் அவஸ்தையும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அரசுக்கு எதிரான நிலைப்பாடுகள் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே அதிகரித்து வரும் நிலையில் மு.கா வின் தலைமை, மக்களின் மனோநிலைக்கு மதிப்பளித்து சமூகத்தின் உண்மையான பிரதிநிதி மு.கா வே என்பதை புடம் போட்டு காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

கிழக்கு மாகாண தேர்தலில் தனித்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்கள் தொடர்பாக அரசின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பிரசாரங்களை முன்னிலைப்படுத்தியதால் 80,000 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. மு.காவின் பெருந்தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் கூட அம்பாறை மாவட்டத்தில் இவ்வளவு தொகையான வாக்குகள் கிடைத்திருக்கவில்லை.

மகிந்தவின் ஆட்சியை ஓரம் கட்டாவிட்டாலும் ஓர் எச்சரிக்கைக்காவது கிழக்கு மாகாண சபையில் தமிழ் கூட்டமைப்பை ஆதரித்து இருக்கலாம், ஏன்ற கருத்து அப்போது மேலோங்கியிருந்தது. அவ்வாறு ஆதரவு வழங்கியிருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் 05 வருடங்களுக்கும் முதலமைச்சர் பதவியை தன்வசப்படுத்தியிருக்கலாம். எனினும் கட்சியின் தவிசாளர் பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கும் இரண்டாம் தலைமை இதை கடுமையாக எதிர்த்ததாலும் கட்சி இரண்டாக பிளவு படும் நிலைமை ஏற்பட்டதாலும் மு.கா தலைமை முடிவை மாற்றிக் கொண்டு மகிந்தவிடமே மண்டியிட்டது. இவ்வாறான நெருக்குதல்கள், அழுத்தங்கள், அச்சுறுத்தல்களை விடுக்கும் ஓர் சக்தி, மு.காவுக்குள் இருக்கும் வரை மகிந்தவின் ஊதுகுழலாகவே மு.கா செயற்படவேண்டி இருக்கும் தலைமையை மீறிச் சென்று அமைச்சர் பதவியை எடுத்துக் கொண்டமை, கட்சியின் சக எம்பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்களை ஆசை வார்த்தை காட்டி கட்சிக்குள்ளேயே தலைமைக்கு எதிரான அணியை உருவாக்கும் போக்கும், பொது மேடைகளில் மிகவும் பண்பற்ற முறையில் தலைமையை விமர்சிப்பதும் அரசாங்கத்தை அபரிமிதமாக ஆதரித்து பேசுவதும் மு.காவின் இரண்டாம் மட்ட தலைமையின் வாடிக்கையாகி விட்டது. இதனால் முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால போராளிகள், மூத்த உறுப்பினர்கள் விரக்தியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அரசியலை விடவும் மிகப்பலமாக உள்ள சமய நம்பிக்கைகளை, கொள்கை, கருத்து, சிந்தனை ரீதியாக உருக்குலைத்து கிழக்கு மாகாணத்தின் மிகப்பழைய வரலாற்றை காத்தான்குடி போன்ற ஊர்களின் கட்டுக்கோப்புகளை தகர்ப்பதற்கு திரைமறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக முஸ்லிம்களின் ஜென்ம விரோதிகளாக வளர்ந்துள்ள பொதுபல சேனாவுடன் சில விடயங்களில் உடன்பாடு ஏற்பட்டது போல தெரிகிறது. ஆத்மீக ரீதியான இஸ்லாமிய அமைப்புக்களை மட்டுப்படுத்தி தங்களின் கொள்கைகளை கிழக்கில் புகுத்தவும் அரசியல் பலங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இதற்காக இனவாத சிங்கள அமைப்புக்களுக்கு நெருக்கமான புள்ளிகளுடனும் கிழக்கின் இராணுவ உயர்மட்டங்களுடனும் பல்வேறு சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளன. காத்தான்குடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அப்துல்லாஹ் பயில்வான் அடக்கஸ்தலத்தை பாதுகாக்கவும் இந்த சக்திகள் துணைபோயுள்ளன. மேலும்  ரவூப் மௌலவியின் மார்க்கக் கொள்கை உடையோரை பலப்படுத்தி அவர்களை தம் வசப்படுத்துவதே இதன் பின்னணியாக இருக்கிறது.

இவர்களின் இந்த முயற்சிகள் வெற்றியளித்தால் ஊர் இரண்டாகப் பிளவு படும். ஊரின் கட்டுக்கோப்பு சிதைவடையும். இதன் மூலம் ஒரு தொகை வாக்குகளை தாரை வார்க்கலாம் என்ற திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு வேளை முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவின் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தாலும் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் மு.காவுடன் செல்ல விடாமல் தடுப்பதற்கே இந்த பகீரதப்பிரயத்தனங்கள் எல்லாம். கொந்தராத்து வேலைகளை மிகவும் கச்சிதமாக முன்னெடுத்து வருபவர்கள் போலி வீடியோ நாடாக்களையும் பயன்படுத்த திட்டமுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்கள் தொடர்பாக காத்திரமான தீர்மானங்களை எடுக்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது. இரகசிய கூட்டங்கள் அவ்வப்போதே புதிய தொழில்நுட்பம் மூலம் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு அச்சொட்டாய் கிடைக்கிறது. ஆட்சிக்காக, அதிகாரத்திற்காக , காசுக்காக, கப்பலுக்காக எதையும் செய்யலாம் என்ற நிலை உருவான பின்னர் மு.கா.தலைமை என்ன தான் செய்யப் போகின்றது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: