Advertisements

கட்சிகளை உடைக்கும் அரசாங்கம், எங்களை பகடைக்காய்களாக பாவிக்க இடங்கொடுக்கமாட்டோம்: ஹக்கீம்

எங்களை மற்றவர்கள் பகடைக்காய்களாக பாவிக்க இடங்கொடுக்காமலும், அடுத்த கட்சிகளின் முன்னெடுப்புகளை கூர்மையாக அவதானித்தவர்களாகவும் தான் நாங்கள் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த முடிவு ஈற்றில் இந்த நாட்டு முஸ்லிம்களின் விமோசனத்திற்கு வழிவகுக்கின்ற முடிவாகவும் இருக்க வேண்டும். இதற்கு முன்னைய தேர்தல்களை விடவும் இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் முடிவு என்னவாக இருக்கப் போகின்றது என மிகவும் அவதானமாக நோக்கப்படுகின்றது. 

இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அட்டாளைச்சேனையில் ஞாயிற்றுக்கிழமை (2) மாலை நடைபெற்ற கட்சியின் அம்பாறை மாவட்ட மத்திய குழு கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,

இன்று அரசியலைப் பொறுத்தவரை எல்லாத் தரப்புகளிலும் ஒருவிதமான தடுமாற்றம் காணப்படுகின்றது. இது எங்களுக்குள் மாத்திரம் உள்ளதல்ல. சனிக்கிழமை அரசாங்கத்திலுள்ள கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உருமய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அதேபோன்று லங்கா சமசமாஜக் கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது என்ற தனது தீர்மானத்தை அறிவித்துள்ளதை தொடர்ந்து அக் கட்சி இரு கூறுகளாக பிளவுபடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது.

வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத ஜாதிக ஹெல உருமயவினர் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல்    அரசாங்கத்திற்கு ஆதரவாக தீர்மானம் எடுத்தால் அந்தக் கட்சியும் இரண்டாக உடையும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

எல்லாக் கட்சிகளும் உடைந்து சிதறுண்டு போகின்ற நிலைமை உருவாகிக் கொண்டு வருகின்றது. எல்லாக் கட்சியினரும் மாறி மாறி ஜனாதிபதியோடு உறவாடி உடைந்து தான் போயிருக்கிறார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நிபந்தனையின்றி ஜனாதிபதியை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறார். ஆனால், அவரது கட்சியினரும் உடைக்கப்பட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பதுளையில் வடிவேல் சுரேஸ் என்பவரை இணைத்து வைத்துக்கொள்கிறார்கள். அமைச்சர் தொண்டமான் அவர்களோடு இணங்கி போக முடியாதவர்களுக்கு அரசாங்கத்தில் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.  இவற்றையெல்லாம் ஜீரணித்துக் கொண்டுதான் அவரும் இருக்கிறார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் அரசாங்கம் கை வைக்கப் போய் அதிலுள்ள கஷ்டமும், பாரதூரமும் ஒரு ஜனாதிபதி தேர்தல் நெருங்குகின்ற போது தான் அவர்களுக்கு புலப்படுகின்றது. இந்தப் பின்னணியில் நாம் ஒரு விடயத்தை தெளிவாக கண்டு கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி சந்திரிகாவுக்கு ஆரம்பத்தில் ஒரு ஆசன வித்தியாசத்தில் நாம் பாராளுமன்ற பெரும்பான்மையை எடுத்துக் கொடுத்தோம். அந்த ஆட்சி நடந்தது. 62 சதவீத வாக்குகளால் அவர் ஜனாதிபதி தேர்தலில் வென்றார் என்ற காரணத்தினால் அவ்வாறு நடந்தது. இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வென்றும் கூட அந்த அளவு வாக்கு வீதம் கிடைக்கவில்லை.

அந்த சந்திரிகாவுடைய ஆட்சியின் இரண்டாந்தவணைக் காலத்தின் போது 1999 ஆம் ஆண்டு அவரும் தன்னுடைய பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பு தான் தேர்தலுக்கு போனார். அதில் நாங்கள் அவரை ஆதரித்தோம்.

2000 ஆம் ஆண்டு தேர்தல் வந்த போது மறைந்த தலைவர் அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்படுவதற்கு முன்பு பத்திரிகைகளில் கொடுத்த பேட்டியில் நல்லதொரு பாடத்தை அரசாங்கத்திற்கு புகட்டப் போவதாக கூறியிருந்தார். மிகவும் ஆத்திரத்தோடு தான் சந்திரிகாவை ஜனாதிபதி ஆட்சியில் அமர்த்திவிட்டு பாராளுமன்றத் தேர்தலில் ஒரு கை பார்க்க இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

சமகாலப் பிரச்சினைகளை முன்னைய சம்பவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது அவற்றில் நிறைய ஒற்றுமை இருப்பதாக பார்க்கிறேன்.

இந்த இயக்கம்  ஒரு கையாலாகாத நிலைக்கு வந்திருக்கிறது என்பதுதான் எமது கட்சியினருக்கு இன்றிருக்கின்ற கவலையாகும். இதை சரிசெய்கின்ற வியூகம் இல்லாமல், நாங்கள் போட்டியிடாத ஒரு தேர்தலில் கட்சிக்கு வாக்கு கேட்பது என்பதே மக்கள்; ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இதனை மீறி நாங்கள் முடிவெடுக்க முடியாதததால், மிகப் பக்குவமாகவும் நேர்மையாகவும் இதனைச்  செய்ய வேண்டும். இந்த விடயங்களைப் பற்றி பேச வேண்டும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஒரு மாயாஜால வித்தைக்காரர் அல்ல. மந்திரத்தினால் சாதித்து விட முடியாது. மிகத் திறந்த மனதோடு நாம் கலந்துரையாட வேண்டும். மக்களது விருப்பத்தை புர்ந்து கொள்ளாமல் புறந்தள்ளி தேர்தல் பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது. அது செய்யக் கூடாத காரியம்.

ஒரு விடயத்தில் தெளிவு இருக்கிறது. நான் வகுத்த வியூகங்கள் மக்களை எங்களை நோக்கி வரவழைக்கின்ற வியூகங்களாகத் தான் இருந்தன. நாங்கள் வகித்த வியூகங்கள் உரிய அரசியல் அதிகாரங்களை எங்களுக்கு தராமல் விட்டிருக்கலாம். கை நழுவிப் போயிருக்கலாம். ஆனால் மக்கள் எமது வியூகங்களுக்கு பின்னால் வரவில்லை என யாரும் எந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது.

அரசாங்கம் ஏதோ ஒரு கணிப்பை போட்டு முஸ்லிம் காங்கிரஸ் தன்னோடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது. மற்றக் கட்சிகளைப் போலவே முஸ்லிம் காங்கிரஸ் தன்னோடு வராவிட்டால் அதனை உடைக்க தனக்குத் தெரியும் என எண்ணலாம். அவ்வாறு அகங்காரமும் ஆணவமும் தான் அதற்கு காரணம். அந்த ஆணவத்திலும் அகங்காரத்திலும் தான் இந்த ஆட்சியாளர்களுடைய வியூகங்கள் இருப்பது இன்று மற்றக் கட்சிகளுக்கு நேரும் கதியைப் பார்க்கின்ற பொழுது தெளிவாக தெரிகின்றது.

ஜாதிக ஹெல உருமய ஒரு கோரிக்கைப் பட்டியலை முன் வைத்திருக்கிறார்கள். அந்த கோரிக்கைகள் எல்லாவற்றிலும் நல்லாட்சிக்கானவற்றைத் தவிர ஏனையவற்றில் முஸ்லிம் காங்கிரஸிற்கு உடன்பாடில்லை. அவற்றில் முஸ்லிம்களை குறிப்பாக இலக்கு வைத்த கோரிக்கைகளும் அடங்கியுள்ளன. நல்லாட்சிக்கான அவர்களது கோரிக்கைகள் ஜனநாயக நாடொன்றில் வரவேற்கத்தக்கனவாகும். அதனால் அவற்றைப் பற்றி நாங்கள் பெரிதாக பேசவில்லை.

வழமையாகவே முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைப் பட்டியல்களை நிராகரிப்பதன் மூலம் தங்களது வாக்கு வங்கியின் சரிவை சரி செய்து கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் இந்த அரசாங்கத்தில் இருக்கிறார்கள். அரசாங்கத்தின் தலைமைப் பீடமே அவ்வாறான எண்ணத்தில் தான் இருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி, அதன் கோரிக்கைப் பட்டியல் ஒன்றுக்கும் தாங்கள் செவி சாய்து அங்கீகாரம் கொடுத்து விட்டால் தங்களது சொந்த வாக்கு வங்கியை இழக்க வேண்டிய வரும் என்கின்ற ஒருவிதமான பீதியிலிருக்கின்ற ஓர் அரசாங்கத்தில் இருந்து கொண்டுதான் நாங்கள் கோரிக்கைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.
ஆனால், அதே அரசாங்கம் ஒன்றை நினைக்க வேண்டும். நாங்கள் போட்டியிடாத ஒரு தேர்தலில் அதுவும் இதுவரையும் எமது மக்களை வாக்களிக்கச் சொல்லாத ஒரு சின்னத்திற்கு வாக்களிக்கச் சொல்லுவதன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு காரியத்தை நாங்கள் செய்ய வேண்டுமா? இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு கூறுவதன் மூலம் ஏற்படுகின்ற இடைவெளிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி புகுந்து கொள்ள இடமளிப்பதன் ஆதங்கம் எங்கள் கட்சியினர் மத்தியில் உள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை இழந்து, அரசாங்கத்தால் வாக்களிப்பட்டவற்றையும் செய்யாத நிலையில் அவர்களை ஆட்சியில் நிலை நிற்க வைப்பதற்கு எங்களுக்கு என்ன தேவையிருக்கிறது என்பதுதான் இன்று எழுந்துள்ள கேள்வியாகும். இதை புரிந்து கொள்ளாத ஆட்சித் தலைமையோடு இணைந்திருப்பது பற்றித்தான் மக்கள் ஆத்திரத்தோடும், ஆவேசத்தோடும் எங்களிடம் கேட்கிறார்கள். இவ்வாறான விடயங்களில் தான் எமது கட்சியினர் தலைமையோடு முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நியாயங்களை முழுமையாக உள்வாங்காமல் வெறும் பூச்சாண்டி அரசியலை இந்த அரசாங்கத்தோடு செய்ய முடியாது என்பதுதான் இன்றுள்ள நிலைமையாகும்.

எல்லாவிதமான ஆசை வார்த்தைகளையும் இந்த அரசாங்கம் அள்ளிக்கொட்டுகின்ற காலகட்டமாக இது இருக்கின்றது. எதைக் கேட்டாலும் கொடுக்கின்ற நிலைமை. தாராளமாக எவற்றையும் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதை நாம் காண்கிறோம்.

எதிர்த்தரப்பின் அரசியல் இப்பொழுது எவ்வாறு திரண்டு வருகிறது என்பதிலும் நாம் அலட்சியமாக இருக்க முடியாது. சாத்தியமானவற்றை சாதிக்கின்ற கலை தான் அரசியல் என்று நாங்கள் அடிக்கடி பேசுவதுண்டு. ஆனால், சாதிப்பதற்கான சாதகமான களநிலவரம் வேண்டும்.

ஆட்சிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக எதிர்க்கட்சியிலும் இருக்கின்ற புகைச்சல்கள் வெளியே தெரியாது விட்டாலும், பல விடயங்களை நாங்கள் மிகக் கூர்மையாக அவதானித்துக் கொண்டு வருகிறோம். மற்றக் கட்சிகளுக்குள் நடக்கின்ற பிரச்சினைகளுக்குள் விரல் நுழைக்கின்ற அல்லது அதை தூண்டிவிட்டு கூத்துப் பார்க்கின்ற காரியத்தில் ஒரு போதும் செய்ததில்லை.

இந்த அரசாங்கத்திற்குள்ளும் விரக்தி உணர்வுகளோடு பலரும் பல விடயங்களை இப்பொழுது பேசி வருகிறார்கள். முஸ்லிம் காங்கிரஸ் முதலில் கழுத்தைக் கொடுக்க வேண்டும். அப்படியானால் அதன் முதுகில் ஏறி தாங்கள் சவாரி செய்யலாம் என நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.

அன்றும், இன்றும் முஸ்லிம் காங்கிரஸை அடிப்பதற்கென்று கங்கணம் கட்டப்படுவதனால் நாங்கள் ஆத்திரமடைகிறோம். முஸ்லிம் காங்கிரஸின் இருப்பிற்கு ஆபத்து ஏற்படுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். எங்களை அதட்டி, அடிபணிய வைக்க முயற்சிப்பவர்களுக்கு நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது.

எங்களுக்கென்று ஒரு கட்;டம் வரும். அதுவரை நாம் பொறுமை காக்கிறோம். இதன் பிறகு அவ்வாறு ஒரு கட்டம் வராது. மூன்றாம் முறையாக இங்கு ஒரு ஜனாதிபதி வந்ததில்லை. ஆனால், நான்காம் முறையாக எந்த விதத்திலும் நிச்சயமாக வர முடியாது. 

அதிகாரங்கள் குவிகின்ற பொழுது ஆணவமும் அகங்காரமும் மேலோங்குகின்றன. அதனை வைத்துக்கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்தல் நடாத்த பழக்கப்பட்டிருக்கிறார்கள். காலம் தாண்டினால் அரசியல் செல்வாக்கில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு விடும் அதற்கான பிரதான காரணமாகும்.

நாங்கள் மத்திய அரசாங்கத்தில் மட்டும் ஆட்சியின் பங்காளர்கள் அல்ல. கிழக்கிலும் ஆட்சியின் பங்காளர்கள். கிழக்கில் ஆட்சியின் பங்காளர்களாக வர நேர்ந்ததே வட கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான். இவ்வளவு பங்களிப்புச் செய்தும் எங்கள் சமூகத்திற்கு எதுவும் உருப்படியாக நடக்கவில்லை என்பதனால் தான் எங்களது ஆத்திரமும், ஆவேசமும் இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறது.

எங்களை மற்றவர்கள் பகடைக்காய்களாக பாவிக்க இடங்கொடுக்காமலும் அடுத்த கட்சிகளின் முன்னெடுப்புகளை கூர்மையாக அவதானித்தவர்களாகவும் தான் நாங்கள் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த முடிவு ஈற்றில் இந்த நாட்டு முஸ்லிம்களின் விமோசனத்திற்கு வழிவகுக்கின்ற முடிவாகவும் இருக்க வேண்டும். இதற்கு முன்னைய தேர்தல்களை விடவும் இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் முடிவு என்னவாக இருக்கப் போகின்றது என மிகவும் அவதானமாக நோக்கப்படுகின்றது என்றார்.

இந்த அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் ஆகியோர் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் பலர் உத்தேச ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய தீர்மானம் பற்றி தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: