நுகர்வோர் உரிமைகளும், சட்டப் பாதுகாப்பும்.

Azees அப்துல் அஸீஸ், புலனாய்வு அதிகாரி –

இன்று மனிதன் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றான். அதிகரித்து வரும் சனத் தொகைக்கேற்ப மனித வாழ்வுக்குத் தேவையானான வளங்கள் பற்றாக் குறையாக இருக்கின்றது. இதனால் மனித உயிருக்கு அல்லது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்துகின்றனர். இது மனிதனின் பாதுகாப்பிற்கான உரிமையை மீறுகின்றது என நாம் கருதலாம்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சிபெற்றதைத் தொடர்ந்து அனைத்து பொருட்களுக்கும் விளம்பரங்கள், செய்யப்பட்டு வருகிறது. இக்கவர்ச்சியினால் பண்டங்கள் பற்றிய உண்மையான தகவல்களை பெற்றுக் கொள்வது மிகவும் கடினமாக உள்ளது என்றே கூற வேண்டும்.

அத்துடன் பதுக்கி வைத்தல், ஏமாற்றுதல் மற்றும் மோசடி செய்தல் போன்ற செயல்கள் இன்று அதிகரித்து விட்டதனால் நுகர்வோர்கள் நம்பிக்கையுடன் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஜேம்ஸ் ஹெல்பர்ட் என்பவரின் கருத்தின்படி, ‘கொள்வனவாளனுக்கு நூறு கண்கள் தேவை, விற்பனை செய்பவனுக்கு ஒன்றுமே தேவையில்லை’ இந்த வகையில் பின்வரும் விடயங்களை நாம் கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

1. நுகர்வோர் என்றால் யார்?
பொருட்களையும், சேவைகளையும் நுகரும் அல்லது அனுபவிக்கும் எவரும் சமுகத்தில் எத்தகைய அந்தஸ்தினை தாம் வகித்த போதிலும் உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் நுகர்வோர்களாகவே கருதப்படுவர்.

2. நுகர்வோரின் உரிமைகள் என்றால் என்ன?
• உயிர்வாழ்வதற்குத் தேவையான பொருட்களையும், சேவைகளையும் உத்தரவாதம் செய்யும் உரிமை
• உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு எதிராக பாதுகாப்;பு பெறும் உரிமை.
• மோசடி செய்தல், வஞ்சகம் செய்தல், தவறாக தகவல்களைக் கொடுத்து வழிநடத்தல் இது போன்ற ஏனைய செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை
• பொருட்களின் தெரிவுக்கான உரிமை
• பொருட்கள் பற்றிய விபரங்களைக் கேட்பதற்கான உரிமை
• நிவாரணம் பெறுவதற்கான உரிமை
• நுகர்வோருக்கு நுகர்ச்சி சம்பந்தமான அறிவையும், திறனையும் பெறுவதற்கான உரிமை

3. விற்பனையாளரின் கடமைகள் என்றால் என்ன?
• சரியாக இயங்குவதும் அனுமதிப் பத்திரமுள்ள அளவை நிறுவை உபகரணங்களை உபயோகிக்தல்
• பொருட்களின் விலைகளை நுகர்வோருக்கு இலகுவில் தெரியக்கூடியதாக காட்சிப்படுத்துதல்
• தனது பொறுப்பை நீக்கும் வாசகங்களை குறிப்பிடாது இருத்தல்
• சந்தை விலை தரம் என்பவற்றில் கவனத்துடன் செயற்படுதல்
• உற்பத்தியாளர் மற்றும் காலாவதியாகும் திகதி என்பவற்றில் கவனமாக இருத்தல்
• உற்பத்திக் கூறுகள் வெளிப்படுத்தப்பட்டிருத்தல்
• சுகாதாரப் பாதுகாப்பிற்கு பொருப்பாக இருத்தல்
• பொருட்களின் உபயோகம் பற்றிய போதுமான தகவல்களை வழங்குதல்
• காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை விற்க ஒரு போதுமே மறுத்தலாகாது
• குறித்த பொருள் ஒன்றுடன் சேர்த்தே மற்றொரு பொருள் விற்கப்படும் என நிபந்தனையிடக்கூடாது
• தரம் பற்றிய நிர்ணயம் அல்லது உறுதி காணப்படல் வேண்டும்.

4. நுகர்வோரின் கடமைகள் என்றால் என்ன?
• அதிமுக்கிய தேவையாக உள்ளபோது மாத்திரமே கொள்வனவு செய்தல் வேண்டும்
• அவசரமாகவோ, பதட்டத்துடனோ எப்பொருளையும் கொள்வனவு செய்யக்கூடாது
• கொள்வனவு செய்யும் போது உற்;பத்தி பொருளின் தரம் மற்றும் அளவு என்பவற்றினை பரிசீலனை செய்தல் வேண்டும்
• பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதற்கான பற்றுச் சீட்டையும் உத்தரவாதப் பத்திரங்களையும் பெற்றுக் கொள்ள மறக்கக்கூடாது.
• இலத்திரனியல் கருவிகளைக் கொள்வனவு செய்யும் போது அதன் தரநிர்ணயம், உபயோகிக்கும் முறை என்பவற்றை உறுதி செய்யும் பத்திரங்களைக் கேட்டுப் பெறுதல் வேண்டும்
• உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது தரம், விலை, காலாவதியாகும் நாள், மற்றும் உற்பத்தியாளர் என்பவற்றைப் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
• கொள்வனவு செய்வதற்கு ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அதுபற்றி எவரிடம் அல்லது எங்கு முறையிடுதல் வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.

5. இலங்கையில் நுகர்வோர் தொடர்பான சட்டப் பாதுகாப்பு என்றால் என்ன?
2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 09 ம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டம் மிகவும் முக்கியமானதாகும்
• இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாக பாவனையாளர் அதிகார சபையைத் தாபித்தல்
• வினைத்திறமையான போட்டியையும், பாவனையாளர் பாதுகாப்பையும் முன்னேற்றுதல்
• உள்நாட்டு வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்
• பாவனையாளர் அலுவல்கள் பேரவை ஒன்றை தாபித்தல்.

6. இச்சட்டத்தின் மூலம் பாவனையாளர்களைப் பாதுகாப்பது எப்படி?
• பாவனையாளர்களின் நலன் தொடர்பில் போதியளவு கவனஞ் செலுத்தப்படுவதை உத்தரவாதப்பாடுத்துதல்
• போதியளவு பொருட்கள் பெற்றுக் கொள்வதனை உறுதிப்படுத்தல்.
• பாவனையாளர் சுரண்டுவதிலிருந்து நிவாரணம் பெற வழி செய்தல்.

7. சட்டத்தின் மூலம் எதனைச் செய்ய முடியும்?
• பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு நிவாரணம் அளித்தல்
• திடீர் சந்தைச் சோதனைகளை நடாத்தி முறையற்ற வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்
• குறிப்பிட்ட பொருட்களுக்கு விலை சீராக்கம் செய்தல்
• போட்டி வர்த்தக செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுபவர்களை புலனாய்வு செய்தல்

8. இதன் கீழான குற்றங்கள் எவை?
• பண்டங்களை விலை குறிக்கத் தவறுதல், பொதிகட்டுதல் அல்லது உற்பத்தி மீதான மீறல்கள்
• பண்டங்களின் சுட்டுத் துண்டை அல்லது விபரத்தை மாற்றுதல், தேய்த்து அழித்தல்
• நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேலாக விற்றல்
• வியாபாரி வியாபாரத்தின் போது ஏமாற்றும் நடத்தையில் ஈடுபடுதல்
• குறித்த நியமம் மற்றும் தராதரத்திற்கு அமைவாக இல்லாத பண்டங்களின் உற்பத்தியும் விற்பனையும்

9. உரிமை மீறலுக்கான நிவாரணங்கள் எத்தகையது?
• பதிலீடு செய்தல்
• மீளளிப்பு செய்தல்
• நஸ்டஈடு வழங்கல்

10. நுகர்வோரை பாதுகாத்தல் தொடர்பான ஏனைய சட்டங்கள் எவை?
• 1980ம் ஆண்டின் 26ம் இலக்க உணவு தொடர்பான சட்டம்
• 1984ம் ஆண்டின் 6ம் இலக்க இலங்கை தர நிறுவன கட்டளைச் சட்டம்
• 1984ம் ஆண்டின் 11ம் இலக்க தேசிய ஆபத்தான ஒளடதங்களை கட்டுப்படுத்தும் சபைச் சட்டம்
• 1991ம் ஆண்டின் 25ம் இலக்க இலங்கை தொலைத் தொடர்பு சட்டம்
• 1991ம் ஆண்டின் 37ம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டம்
• 1995ம் ஆண்டின் 35ம் இலக்க அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் சட்டம் (A2)

Comments

  1. Rakkeeb says:

    புலனாய்வு அதிகாரி சகோதரர் அஸீஸ் அவர்களை தொடர்பு கொள்வதற்குரிய மின்னஞ்சல் முகவரியை தர முடியுமா?

    • siththeek says:

      இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மட்டக்களப்பு பிராந்திய அலுவலக மின்னஞ்சல் முகவரி

      hrcbatti@sltnet.lk

Leave a comment