Advertisements

அகவை இரண்டில் காத்தான்குடி இணையச் சமூகம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

எதிர்வரும் ஏப்ரல் 14ம் திகதியுடன் காத்தான்குடி இணையச் சமூகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும். தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக எமது அங்கத்தவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் விபரிப்பதோடு, அவர்களின் தொடர் பங்களிப்புகளையும் ஆதரவையும் கோரும் நோக்கத்துடன் எழுதப்படும் இப்பதிவு சற்று நீண்டதாக அமைகிறது.

ஆரம்பத்தில் யாஹூ குழு மாத்திரமே எமது ஒரே நடவடிக்கையாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். பின்னர் ஒரு இணையத்தளமும் கருத்தாடல் இணையமும் (web forum) பல அங்கத்தவர்களுடைய உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு வருடம் இயங்கிய போதும், ஊரிலிருந்து போதிய உள்ளீடுகள் இல்லாததாலும், இயக்குனர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்ததாலும், வாசகர் பங்களிப்பு போதியளவு இல்லாமையாலும் இவை இரண்டும் கைவிடப்பட்டன.

ஆனாலும், கடந்த சில காலமாக எமது இணையத்தளம் வேர்ட்பிரஸ் ஊடாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் www.kattankudi.info என்று முகவரி மாற்றம் பெற்று வெற்றிகரமாக இயங்கி வருவதை நீங்கள் அறிவீர்கள். கடந்த தேர்தல் கால செய்தி மற்றும் முடிவுகளின் தொடர்ந்த பதிவேற்றம் காரணமாக இப்போது நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட பார்வைகளுடன் எமது இணையத்தளம் இயங்குகிறது, கடந்த 09.04.2010 அன்று 5,000 பார்வைகள் வரை  எமது தளம் பதிவு செய்திருந்தது. ஆரம்பித்த காலத்திலிருந்து மொத்தப் பார்வைகள் 84,500. அல்ஹம்துலில்லாஹ். 

மேலும் facebook, twitter போன்ற தற்போது பிரபலமாகவுள்ள தளங்களினூடாக எமது நடவடிக்கைகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதையும் நீங்கள் அவதானித்திருக்கக் கூடும். கடந்த நான்கு மாதங்களாக தொழிநுட்ப ரீதியான நோக்கில் எமது இணையச் சமூக நடவடிக்கைகள் நல்ல நிலைக்கு முன்னேறியிருக்கின்றன. எமது facebook fan page 408  fans உடனும் facebook கணக்கு 807 நண்பர்களுடனும் யாஹூ குழு 606 உறுப்பினர்களுடனும் தற்போது இயங்குகின்றன. twitter இல் பலர் தற்போது followers ஆக இணைந்துள்ளனர். இவ்வாறான அனைத்து செயற்பாடுகளின் வெற்றியும் எமது வாசக மற்றும் அங்கத்தவர்களாலேயே சாத்தியமாயின. எதிர்காலத்தில் உங்களது கூடிய பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

மேலும் பரீட்சார்த்தமாக இலங்கையிலிருந்து இணையத்தில் ஒலி – ஒளிபரப்புகளை மேற்கொள்ளும் அனைத்து சேவைகளுக்கான இணைப்புகளையும் ஒருங்கிணைத்து Kattankudi Tube எனும் இணையத்தளம் www.kattankuditube.blogspot.com எனும் முகவரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் twitter ஊடான இலங்கை தொடர்பான செய்தித் தலைப்புகளின் தொடர் பாய்ச்சலுக்குரிய (News Headline Feeds) உள்ளடக்கப்பட்டிருப்பது முக்கியமானதாகும். அத்துடன் facebook விசிறிகளை (fans) எழுந்தமானமாகக் காட்டும் காட்டி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இத்தளத்தை தனது வேலை மற்றும் கல்வி போன்றவற்றுக்கான தொடர் பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி வடிவமைத்த சகோதரருக்கு எமது மனமார்ந்த நண்றிகள்.

கடந்த கால நிகழ்வுகள் தொடர்பில் எமது பார்வையைச் செலுத்துவோமாயின் ஊரில் இருந்து தொடர்ந்து உண்மையான – நடுநிலையான முழு நேர செய்தியாளர்கள் யாரையும் கொண்டிருக்க நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து நிலவும் அச்சுறுத்தல் நீங்கள் அறிந்ததே. கடந்த மாகாண சபை தேர்தல் காலத்தின் போது எமது யாஹூ குழுவின் இயக்குனர் ஒருவர் வெளிநாட்டில் இருந்த போதே தொலைபேசியூடாக மிரட்டப்பட்டார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தகவல் வழங்கிய உறுப்பினர் ஒருவரும் இவ்வாறே  மிரட்டப்பட்டார். ஒரே ஒரு செய்தியாளர் மாத்திரம் தனது விபரங்கள் ரகசியமாகப் பேணப்படவேண்டும் என்ற கடும் நிபந்தனையுடன் செய்திகளை வழங்கி வருகிறார்.

மேலும் அவ்வப்போது நாம் வெளியிடும் செய்திகள், குழுவில் உறுப்பினர்களால் இடப்படும் பதிவுகளைப் பொறுத்து இவர்கள் இந்த நபருக்கு அல்லது இந்தத் தரப்புக்கு ஆதரவளிக்கிறார்கள் அல்லது எதிராகச் செயற்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. தொடர்ந்து இவை தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கின்றோம். ஆயின் முடிந்தளவு நாம் நடுநிலைத் தன்மையை கடைப்பிடிப்பதை நடுநிலையாகச் சிந்திக்கும் எவரும் ஏற்றுக்கொள்வர்.

ஒரு தரப்பு அல்லது நபர் சார்ந்து இயங்கும் உறுப்பினர்கள் அல்லது வாசகர்கள் அந்தத் தரப்புக்கு அல்லது நபருக்கு எதிரான செய்திகளை அல்லது பதிவுகளை வாசிக்கும் போது உணர்ச்சி வசப்படுகின்றனர். அவசரப்பட்டு எம்மீதும் பதிவை எழுதிய உறப்பினர் மீதும் ஏச்சுகளையும் குற்றச்சாட்டுகளையும் அள்ளி வீசுகின்றனர். கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள அவர்களால் முடிவதில்லை. சந்தர்ப்பவச  உணர்ச்சியூட்டலால் சில விடயங்களை எழுதி விட்டு போய் விடுகின்றனர். இது ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு இட்டுச் செல்லாது. வெளியிடப்படும் விடயத்தை ஆழ்ந்து வாசித்து நடுநிலையாக யோசியுங்கள் பின்னரும் கருத்துகள் பிழையாகவோ அல்லது உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலோ எழுதுங்கள், வெளியிட நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஏற்கெனவே அவ்வாறான பல கருத்தாடல் தொடர்கள் இடம்பெற்றுமுள்ளன. மாறாக, இவர் யார் இதைச் சொல்ல? என்ற வகையில் எழுதியவரை  இலக்கு வைப்பீர்களாயின், மன்னிக்கவும், அதற்குரிய களம் இதுவல்ல.

அத்துடன் இச்செயற்பாடுகளுக்குரிய முகாமைத்துவ அணி இலங்கைக்கு வெளியில் இருந்து இயங்குவதாலும் பல நடைமுறைச் சிக்கல்களை நாம் எதிர்கொள்கின்றோம்.

எனவே எமது நடுநிலைத் தன்மை குறித்த உறுதியானதும் இறுதியானதுமான அறிவித்தல் இதுவாகும். இனிமேலும் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றே நாங்கள் கருதுகின்றோம், ஏனெனில் ஏற்கெனவே பல தடவைகள் இவ்வாறு நாங்கள் பதிலளித்தாகிவிட்டது.

முக்கியமான ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். இதே வகையான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பல தரப்புகள் தொடர்ந்து எம்முடன் முரண்பட்டு எங்களை கருத்து ரீதியாகத் தாக்குவதில் குறியாக இயங்குகின்றனர். பொய்யான பெயர்களில் யாஹூ குழுவில் இணைவது, இயக்குனர் குழுவை ஒரு பதிவினூடாக விமர்சிக்க ஆரம்பிப்பது பின்னர் நீங்கள் சரியில்லை, பக்கச் சார்பாக இயங்குகிறீர்கள், நாம் வேறு ஒரு குழுவை ஆரம்பிப்போம் என்று (மிரட்டுவதாக நினைத்துக் கொண்டு) சவடால் விடுவது என்று சிலர் இருக்கிறார்கள். azeezabdul, kkyabdul உட்பட மற்றும் பல இவ்வாறான உறுப்பினர்களை குழுவின் ஆரோக்கியமான செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு தடை செய்ய வேண்டிய நிலை கடந்த காலத்தில் ஏற்பட்டது.

யாஹூ குழு ஆரம்பித்து நடத்துவது ஒன்றும் பெரிய சாதனை கிடையாது. யாஹூ முகவரியுள்ள யாரும் அதைச் செய்யலாம். மாறாக எமது குழு என்ன செய்திருக்கின்றது என்று நீங்கள் பார்ப்பீர்களாயின், இரண்டு வருடங்களுக்குள் அறுநூறுக்கும் அதிகமான உறுப்பினர்களைத் திரட்டி காத்தான்குடியைச் சேர்ந்த அதிகளவு பேரை இணையத்தில் ஒன்று திரட்டிய குழுவாக இது திகழ்கிறது. நாங்கள் எதிர்பார்த்த இரண்டு வருடத்துக்குள் 1000 உறுப்பினர்கள் என்ற இலக்கை அடைய முடியாவிட்டாலும், குறிப்பிடத்தக்களவு தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்படுகிறது.  முக்கியமாக தனி நபரால் கட்டுப்படுத்தப்பட்டு கருத்துகளுக்கு இரும்புத் திரை போடாமல், ஆறு மட்டறுப்பாளர்களைக் (Moderators) கொண்டு  அனைவரும் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக முன்வைக்கக்கூடிய ஒரு கருத்தாடல் தளமாக நாமது யாஹூ குழு விளங்குகிறது. இயன்றளவு விரைவாக பதிவுகளை வெளியிடவே நாம் எத்தனிக்கிறோம். அத்துடன் ஆரம்பத்தில் இருந்ததிலும் பார்க்க அதிகம் பேர் தமது கருத்துகளை எழுதும் களமாக இக்குழு விளங்குகிறது. வெறுமனே வாசிப்பதுடன் மட்டும் நின்று விடாமல் இன்னும் அதிகம் பேர் உங்களது கருத்துகளை எழுதி பங்களிப்புச் செய்ய முன்வருவீர்களாயின், நாம் மேலும் பலம் வாய்ந்த ஒரு இணையச் சமூகமாக மாற முடியும். அத்துடன் எமதூரைச் சேர்ந்த அல்லது ஊர் விடயங்களில் கரிசனையுள்ள உங்களுக்கு தெரிந்த எவருக்கும் எமது குழுவை அறிமுகம் செய்யுங்கள். அதிகமதிகம் அங்கத்தவர்கள் சேரும் போது அதிகமான கருத்துகள் பரிமாறப்படும் ஒரு இடமாக நாம் மற்றம் பெறுவோம்.

அத்துடன் எமது தளத்திலும் யாஹூ குழுவிலும் வெளிவருபவற்றை அப்படியே பிரதி பண்ணி எமது அனுமதி ஏதும் இன்றி வெளியிடும் கேவலமான செயற்பாட்டை தொடர்ந்து செய்யும் சில முகவரியற்ற நபர்களும் இருக்கிறார்கள். இவர்கள் ஊடகத்தின் அடிப்படைப் பண்புகள் எதுவுமற்றவர்களாக இயங்குகின்றனர். வாசகர்களுக்கு அனைவரயும் அறிந்து கொள்ளும் திறன் இருக்கிறது என்பதால், இவர்களை நாங்கள் கவனத்தில் எடுப்பதில்லை. இவர்களது திறமை சார்ந்த வறுமை எமது இணையச் சமூகத்தின் சின்னமாக எமது வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட KWC log விலிருந்து கூட திருடும் அளவுக்கு இவ்வாரம் இட்டுச் சென்றிருக்கின்றது.

இணையத் தளம் தொடர்பில் பல புதிய விடையங்களை உள்ளடக்கி, முழுமையான புது வடிவில் இணையத் தளம் ஒன்றை கொண்டு வரும் நோக்கில் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நடைமுறைக்கு வர காலம் எடுக்கக் கூடும். இணையத் தள வடிவமைப்பு மற்றும் அது சார்ந்த செயற்பாடுகளில் திறமையுள்ள யாரும் எமக்கு உதவலாம். விருப்பமுள்ளவர்கள் kattankudi@yahoo.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவும். மேலும் வாசகர் ஆக்கங்களை இணையத்தில் வெளியிடவும் நாம் தயாராக இருக்கிறோம். உங்களது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மற்றும் எந்தப் படைப்பாயினும் எமது மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும், பொருத்தமானவை பிரசுரிக்கப்படும்.

மிக முக்கியமாக ஊரிலிருந்து செய்திகள் அல்லது செய்தி சார்ந்த புகைப்படங்கள், ஓடியோ மற்றும் வீடியோ பதிவுகளை அனுப்பக்கூடிய நபர்களின் ஆதரவு எமக்குத் தேவைப்படுகின்றது. உண்மையான மற்றும் நடுநிலையான செய்திகளை எழுதக்கூடியோரும் மிகவும் வரவேற்கப்படுகின்றனர். உங்களது பெயர் வெளியிடப்படுவதை நீங்கள் விரும்பாதவிடத்து அதை ரகசியாமாகப் பேண நாம் தயாராக இருக்கிறோம் ஆனால், தகவல் தரும் நீங்கள் யார் என்ற சரியான விபரம் எங்களுக்குத் தேவைப்படுகின்றது. பாரிய தவறுகள் ஏற்படுமிடத்து அவை தொடர்பில் உரியவரைத் தொடர்பு கொள்ளவே இவை தேவையே தவிர எந்தச் சந்தர்ப்பத்திலும் இணையச் சமூகத்தின் இயக்குனர்கள் தவிர்ந்த யாருக்கும் தகவல்கள் வெளியிடப்படாது.

இறுதியாக இந்த இணையச் சமூகத்தை ஆரம்பித்தவர்களுள் ஒருவராக இருந்து தொடர்ந்து அதன் நடவடிக்கைகளில் பங்கு பெற்று வந்த சகோதரர் உவைஸ் முஹைதீன் சில மாதங்களுக்கு முன்னர் சொந்தக் காரணங்களுக்காக அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் நீங்கிக் கொண்டார். சொந்தக் காரணங்களுக்காக அவர் ஒதுங்கியிருக்க வேண்டி ஏற்பட்ட போது அதை தடுக்க எமால் முடியவில்லை. அவரது அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது மனமார்ந்த ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். எதிர்காலத்தில் சூழ்நிலை இடம்கொடுக்குமிடத்து அவர் எம்முடன் மீண்டும் இணைவார் என்று நம்புகின்றோம்.

எதிர்காலத்தில் எமது அனைத்துச் செயற்பாடுகளும் வாசகர்களும் உருப்பினர்க்களுமான உங்கள் அனைவரினதும் கரங்களிலேயே தங்கியுள்ளது. தனியான ஊடகமின்றி தத்தளிக்கும் எமது சமூகத்தின் ஒரு முக்கிய பகுதியான எமது தாயகம் காத்தன்குடிக்கான வருங்கால ஊடகமாக இணைய வழிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நீங்கள் அனைவரும் துணை நிற்பீர்கள் என்று நம்புகின்றோம்.

இணையமே ஊடகத்தின் நிகழ்காலமாக மாறியிருக்கின்ற நிலையில் எம்மால் முடிந்தளவு எமது ஊருக்கான ஒருங்கிணைக்கப்பட்ட, நடுநிலையான, வெளிப்படையான இணையம் சார் ஊடகம் ஒன்றை எதிர்காலத்தில் நிறுவுவதே எமது குறிக்கோளாகும். இதற்கு கணிசமான ஆள்பலமும் பொருட்செலவும் ஏற்படக்கூடும். இன்ஷா அல்லாஹ் மெல்ல மெல்ல நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் போது, இதை நாம் அடைய முடியும்.

மேலும் எமது கடந்தகால எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான உங்கள் அனைவரதும் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எந்தவொரு நடவடிக்கை தொடர்பிலும் கருத்துகள், விமர்சனங்கள் எப்போதுமே எதிர்பார்க்கப்படுகின்றன.

நன்றி – வஸ்ஸலாம்

காத்தான்குடி இணையச் சமூக முகாமைத்துவ அணி
(KWC Management Team)
Advertisements

Comments

 1. I wish you all the best and hope all your dreams come true………
  Best regards.
  Sonofkky.

 2. Sadique says:

  உங்களது செய்திகளும் செயற்பாடுகளும் என்றென்றும் நடுநிலைமையாகவே இருக்கிறன. உங்களது சேவை மென் மேலும் உயர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 3. Thowfeek says:

  I wish you to have a long live to disclose all kky news and other individual essays. I can help you financially in future Insha Allah. As we know that we, muslims do not have any registered radio station in Sri Lanka. If any body know how to register for a radio station for muslims, dont hesitate to inform me via kky yahoo groups.

  Thowfeek

 4. M.Rafee says:

  WISH YOU ALL THE BEST.

  M.Rafee

 5. jazeer anas says:

  Wish you all the best for your bright and concrete future in the modern media

 6. imran says:

  wish u all the best

 7. ihsan says:

  well done keep it up thanks

 8. shmail says:

  Wish you all the best well keep it up

 9. السلام عليكم ورحمة الله உங்களின் துமையான எண்ணங்கள் துடர்ந்து வெற்றி பாதையில் தொடர எனது மனமார்ந்த் பிரார்தனைகள் அல்லாஹ் உங்களின் இப்பணிக்கு மென்மேலும் துணை புரிவான் .
  உண்மை வளர பொய்மை ஒழிக………….

 10. அவதானி says:

  தொடரட்டும் இது… வாழ்த்துகள் 🙂 மேலும் எம் ஆதரவு என்றும் உண்டு

 11. KKY SIR. says:

  “WISH YOU ALL THE BEST” INSHA ALLAH YOU HAVE A INCREACE YOUR FUTUR PLAN.KEEP IT UP

 12. Brother of KKY says:

  Well done, wish you all success.

 13. Mohd Hanfal says:

  Excellent service, i wish all the best & good luck

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: